தேடல்

அரசியலுக்கு வந்தால் என் வழி தனி வழி! - ரஜினி பேச்சு!!

அரசியலில் நான் நுழைந்தால், என் வழி தனி வழி, என, ரஜினி கூறினார். மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின், 67வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரைப் பற்றி பலர் எழுதிய கட்டுரைகள், தொகுக்கப்பட்டு நூலாக தயார் செய்யப்பட்டது. இந்நூலை, கருணாநிதி வெளியிட, சிதம்பரத்தின் தாய், லட்சுமி அம்மாள் பெற்றுக் கொண்டார். இதற்கான விழா சென்னையில், நடந்தது.

ரஜினியை அரசியலுக்கு இழுக்கிறோம்

விழாவில் பேசிய கருணாநிதி, 1996ம் ஆண்டு தேர்தலில், தமிழ் மாநில காங்கிரஸ் உருவாகவும், வெற்றிபெறவும் பெரும் துணையாக இருந்து சாதித்துக் காட்டியவர் சிதம்பரம்.அந்தத் தேர்தலில், ரஜினி மறைமுக ஆதரவு தெரிவித்தார். அதேபோல், அவரை அரசியலுக்கு மறைமுகமாக இப்போது இழுக்கிறோம். நேரடியாக இழுத்தால் தான் தவறு; மறைமுகமாக இழுத்தால் தவறில்லை என்றார்.

என் வழி தனி வழி

ரஜினி பேசுகையில், 1996ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், நானும் சிறிய பங்காற்றியுள்ளேன். அப்போது, சிதம்பரத்துடன் ஏற்பட்ட நட்பு, இப்போதும் தொடருகிறது. அவர் கூட, எப்போது அரசியலுக்கு வருகிறீர்கள் என, ஒரு ரசிகர் போல் கேட்கிறார். நான் அரசியலுக்கு வந்தால், என் வழி தனி வழி, என்றார்.

கமல்ஹாசன் பேசும்போது, எனக்கு அரசியல் தெரியாது என்பதால் தான், அரசியல் கடந்து பலரின் ரசிகராக இருக்கிறேன். நிதியமைச்சருக்கு உயர் பொறுப்புகள் வரும் என்று பலரும் கூறுகிறார்கள், அவருக்கு வர நானும் ஆசைப்படுகிறேன். அதற்கான உரிமை எனக்கு இருக்கிறது, என் ஆசையை நிறைவேற்றுங்கள் என்றார்.

விழாவில், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், கவிஞர் வைரமுத்து, தமிழறிஞர் அவ்வை நடராசன், பேராசிரியர் அப்துல்காதர், கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன் உள்ளிட்ட பலர், கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிதம்பரம், பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தார். விழா துவங்குவதற்கு முன், அவரது தலைமையில், டில்லியில் பாலியல் கொடுமைக்கு பலியான மாணவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.