தேடல்

அல்ஜீரியாவில் அதிரடி நடவடிக்கை பிணைய கைதிகள் உட்பட, 50 பேர் பலி

அல்ஜியர்ஸ்: ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவில், ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதில், 35 பிணைய கைதிகளும், 15 கடத்தல்காரர்களும் கொல்லப்பட்டனர்.ஆப்ரிக்க நாடான மாலியில், அல்-குவைதா ஆதரவுடன் செயல்படும், பயங்கரவாதிகள், கயோ உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றினர். இந்த பயங்கரவாதிகளை சமாளிக்க, மாலி அரசு, பிரான்ஸ் நாட்டின் உதவியை நாடியது.இதையடுத்து, கடந்த வாரம், மாலிக்கு விரைந்த பிரான்ஸ் படைகள், விமானம் மூலம் குண்டு வீசி, பயங்கரவாதிகள் கைப்பற்றிய பகுதிகளை மீட்டன. இந்த தாக்குதலில், 100க்கும் அதிகமான, பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மாலியில், நிலைமை சீராகும் வரை தங்கியிருக்க, பிரான்ஸ் படைகள் முடிவு செய்துள்ளன.பிரான்ஸ் நாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மாலியின் அண்டை நாடான அல்ஜீரியாவில் உள்ள, எண்ணெய் நிறுவனத்தின் மீது, பயங்கரவாதிகள் நேற்று முன்தினம், தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் கொல்லப்பட்டார்; ஏழு பேர் படுகாயமடைந்தனர்.பிரிட்டன் நிறுவனத்துக்கு சொந்தமான, பிபி நிறுவனத்தில் பணிபுரிந்த, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் ஊழியர் உட்பட, 50க்கும் அதிகமானவர்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர்.கடத்தல்காரர்கள் பதுங்கியிருந்த பகுதியில், அல்ஜீரிய ராணுவம், நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், பிணை கைதிகள், 35 பேரும், கடத்தல்காரர்கள், 15 பேரும் கொல்லப்பட்டனர். 26 பிணைய கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.