தேடல்

அழகிரியை ஆதரித்து போஸ்டர் ஒட்டியவர்களுக்கு தி.மு.க., எச்சரிக்கை: கட்சியில் குழப்பம் ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கையாம்

மத்திய அமைச்சர், அழகிரியின் பிறந்த தினத்தையொட்டி, அவரை துதிபாடும் வகையிலும், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினை, மறைமுகமாக விமர்சிக்கும், பஞ்ச் வசனங்களுடன் கூடிய போஸ்டர்கள், சென்னை உள்ளிட்ட, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் மூலமாக, கட்சியில் குழப்பம் ஏற்படுத்துபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தி.மு.க., தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது.அழகிரிக்கு பிறந்த நாள் பரிசாக, இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியானதால், அவரது ஆதரவாளர்களும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.தி.மு.க., தென் மண்டல அமைப்புச் செயலரும், மத்திய அமைச்சருமான அழகிரியின், 62வது பிறந்த தின விழா, இன்று மதுரையில் கொண்டாடப்படுகிறது. சென்னை நகரில், அழகிரியின் புகழ் பாடும் வகையிலும், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினை விமர்சிக்கும் வகையிலும், விதவிதமான போஸ்டர்கள், பஞ்ச் வசனங்களுடன் ஒட்டப்பட்டிருந்தன.

இந்த போஸ்டர்கள், கோபாலபுரம், சி.ஐ.டி., காலனி இல்லம், அறிவாலயம் உள்ளிட்ட பகுதிகளில், அதிகமாக ஒட்டப்பட்டிருந்தன. இந்த போஸ்டர்களில் காணப்படும் வாசகங்கள், பொருளாளர் ஸ்டாலின் ஆதரவாளர்கள் மத்தியில், கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சில போஸ்டர்களில் இடம் பெற்றுள்ள வாசகம், தி.மு.க., தலைமைக்கும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.தனி மனிதன் புகழ் பாடும் வகையில், கட்சியை மறைமுகமாக, கிண்டலடிக்கும் போஸ்டர்களை ஒட்டியவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஸ்டாலின் ஆதரவாளர்கள் கட்சி தலைமையிடம் புகார் தெரிவித்து உள்ளனர்.இதன் அடிப்படையில், கட்சிக்கு இழுக்கு ஏற்படுத்துபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தி.மு.க., தலைமை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: அழகிரியின் பிறந்ததினத்தை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்துக் கூறுவதாகக் காட்டிக் கொண்டு, கட்சிக்கு அவப்பெயரும், இழுக்கும் ஏற்படுத்தும் வகையில், தவறான வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகள் சென்னையில் காணப்படுகின்றன. அந்தச்
சுவரொட்டிகளை, அச்சிட்டு ஒட்டியவர்கள் என,காணப்படும் பெயர்கள், கட்சியில், எந்தக் கிளை உறுப்பினர்கள் என்று தெரியவில்லை. கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.அதுபோன்று, தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல், கட்சிக்கு இழுக்கு ஏற்படுத்துவோர் எவராயினும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.அழகிரியின் பிறந்த தின விழா, இன்று கொண்டாடப்படும் நிலையில், பிறந்த தின பரிசாக, தலைமை அலுவலகம் விடுத்துள்ள எச்சரிக்கை, அழகிரி ஆதரவாளர்கள் மத்தியில், கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.

இதற்கிடேயே, கருணாநிதியின் வீடு அமைந்துள்ள கோபாலபுரம், அறிவாலயம் பகுதியில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள், தி.மு.க., தொண்டர்கள் மூலமாக, நேற்று மாலை அதிரடியாக கிழித்து எறியப்பட்டன.

நடப்பது ராம நாடகமே அழகிரியின் ஆதரவாளர் ரமணா பெயரில், இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.அதில், இங்கே பரமசிவனும் இல்லை, நாங்கள் கருடனும் இல்லை. நடப்பது ராம நாடகமே என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.

இது குறித்து, தி.மு.க.,வினர் கூறியதாவது: பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பு, கருடனைப் பார்த்து, சவுக்கியமா? எனக் கேட்கும். அதே போல், கருணாநிதியால் தலைமைப் பதவிக்கு வழிமொழியப்பட்டுள்ள ஸ்டாலினை, பரமசிவன்கழுத்து பாம்பு போலவும், அழகிரியை கருடன் போலவும் உருவகித்து இந்த வாசகம்உருவாக்கப்பட்டது.கருணாநிதி ஒன்றும் பரமசிவனும் இல்லை; அழகிரி கருடனும் இல்லை என்ற வாசகங்கள், ஸ்டாலின் ஆதரவாளர்களை கோபப்படுத்தும் நோக்கோடு குறிப்பிடப்பட்டு உள்ளன.

அதே போல், ராமாயணத்தில், அண்ணன் ராமனை, வனவாசம் அனுப்பி விட்டு, தம்பி பரதனுக்கு முடி சூட்டிய விவகாரம் குறித்து, நடப்பது ராம நாடகமே என்ற வாசகம் மூலம் மறைமுகமாகக் கூறப்பட்டு உள்ளது.

மற்றொரு போஸ்டரில், கண்ணகியின் சிலம்பும், மனோகரனின் விலங்கும், விழுந்ததா, வீழ்த்தியதா என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. கருணாநிதி வசனம் எழுதிய, பூம்புகார், மனோகரா படங்களை ஞாபகப்படுத்தி, நியாயம் கேட்கும் போஸ்டராக இது ஒட்டப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -