தேடல்

அதிக அளவில் அன்னிய முதலீடு குவிவதால்...டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 52 ஆக வலுவடையும்

புதுடில்லி:நடப்பு 2012ம் ஆண்டில், பல்வேறு காரணங்களால், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் வெளி மதிப்பு மிகவும் சரிவடைந்தது. இந்நிலையில், மத்திய அரசின் ஊக்குவிப்புத் திட்டங்களால், அன்னிய முதலீடு அதிக அளவில் வரத் துவங்கியுள்ளது.


நிதிபற்றாக்குறை :இதனால், நடப்பு நிதியாண்டின் இறுதியில், ரூபாயின் வெளி மதிப்பு, 52 ஆக வலுவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பு நிதியாண்டில், ஏற்றுமதி குறைந்ததால், நாட்டின் நடப்பு கணக்கு மற்றும் நிதிப் பற்றாக்குறை உயர்ந்தது.மேலும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அதிக அளவில் தங்கம் இறக்குமதி, ஐரோப்பிய நாடுகளின் கடன் பிரச்னை, அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி குறைந்தது உள்ளிட்ட காரணங்களால், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, நடப்பாண்டு ஜூன் மாதம், 22ம் தேதி, 57.32 ரூபாயாக வீழ்ச்சிகண்டது.


தர மதிப்பீடு:இத்தருணத்தில், ஸ்டாண்டர்ட் அண்டு பூர்ஸ் நிறுவனம், இந்தியாவின் தர மதிப்பீட்டை உயர்த்தியது. இதன் காரணமாக, ஜூலை மாதத்தில், ரூபாயின் வெளி மதிப்பு, 55 ஆக உயர்ந்தது.மேற்கண்ட காரணங்கள் தவிர, சென்ற செப்டம்பர் மாதத்தில், ஐரோப்பிய நாடுகளின் கடன் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்க அரசும், பல்வேறு பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்தது.இந்திய அரசு, அன்னிய நேரடி முதலீட்டை கவரும் வகையில், சட்ட நெறிமுறைகளை எளிமைப்படுத்தியது.


இதனால், சரிவடைந்து வந்த ரூபாயின் வெளி மதிப்பு, 51-53 என்ற அளவில் நிலைபெற்றது. குறிப்பாக, அக்டோபர், 5ம் தேதி ரூபாயின் மதிப்பு, 51.35 ஆக வலுவடைந்து காணப்பட்டது.


மற்ற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நன்கு இருக்கும் என்ற அடிப்படையில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றன. இது, வரும் புத்தாண்டிலும் தொடரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.


ஆசிய நாடுகள்:மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும், வரும் 2013ம் ஆண்டில், இயல்பு நிலைக்குத் திரும்பும் என, பல்வேறு ஆய்வு அமைப்புகள் மதிப்பீடு செய்துள்ளன.இதனால், வரும் மார்ச் மாதத்திற்குள், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, மேலும் வலுவடையும் என, பல வங்கியாளர்களும், ஆய்வு நிறுவனங்களும் கருத்து தெரிவித்துள்ளன.