தேடல்

ஆசிரியர்கள் நல்ல ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும்: மாவட்ட கல்வி அதிகாரி பேச்சு

நாமக்கல்:

பள்ளிக் குழந்தைகளுக்கு, நல்ல ஒழுக்கத்தை, ஆசிரியர்கள் கற்பிக்க

வேண்டும். அப்போதுதான், அவர்கள் எதிர்காலத்தில் சிறந்து விளங்குவர், என,

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி பேசினார். நாமக்கல் மாவட்ட

ஆசிரிய கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், கல்விச் சாலை ஒரு பயிற்சிக்

கூடம் எனும் தலைப்பில், துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள்

கருத்தரங்கம், நேற்று துவங்கியது. பயிற்சி நிறுவன முதல்வர் (பொறுப்பு)

மாரப்பன் தலைமை வகித்தார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி

பங்கேற்று பேசியதாவது: அரசுப் பள்ளிகளில், ஏழைக் குழந்தைகள் படிக்கின்றனர்.

அவர்களது கல்வி மேம்பட, ஆசிரியர்கள் நன்கு கற்பிக்க வேண்டும். துவக்கப்

பள்ளி ஆசிரியர்கள், சுதந்திரப் பறவையை போன்றவர்கள். எந்த நிர்பந்தமும்

இல்லை. அதனால், பள்ளி மாணவ, மாணவியர் புரிந்து கொள்ளும் வகையில், எளிய

முறையில் கற்பிக்க வேண்டும். ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம்

அளிக்கப்படும் பயிற்சி, நல்ல பலனை அளிக்கக் கூடியதாகும். அதுபோல்,

பள்ளிகளுக்கு சரியான நேரத்தில், ஆசிரியர்கள் வரவேண்டும். கடந்த ஆண்டு ஆறு

ஆசிரியர்களே, மாநில அளவிலான விருது பெற்றனர். இந்தாண்டு, நாமக்கல்

மாவட்டத்தை சேர்ந்த துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் அதிகளவில், மாநில அளவிலான

விருதுக்கு தேர்வாக வேண்டும். படிப்பு என்பது இரண்டாம் கட்டம். முதலில்,

பள்ளிக் குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கத்தை, ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்.

அப்போது தான், அவர்கள், எதிர்காலத்தில் சிறந்து விளங்குவர். இவ்வாறு அவர்

பேசினார். முன்னதாக, பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் செந்தில்குமார்

வரவேற்றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குமார் கருத்தரங்கை துவக்கி

வைத்தார். அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்

கோபிதாஸ் உட்பட, நாமக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட துவக்கப் பள்ளி

ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.