தேடல்

ஆண்களுக்கான ஸ்கூட்டர் யமஹா புது திட்டம்

இந்தியாவில், இருசக்கர வாகன விற்பனையில், மோட்டார் சைக்கிள்களுக்கு இணையாக, ஆட்டோமேடிக் ஸ்கூட்டர் விற்பனையும், முன்னேற்றம் கண்டு வருகிறது. ஆனால், இந்த பிரிவில், பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து, எடை குறைந்த, நளினமான, ஆட்டோமேடிக் ஸ்கூட்டர்கள் தான், பல்வேறு நிறுவனங்கள் சார்பில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. யமஹா இந்தியா நிறுவனமும், சில மாதங்களுக்கு முன், "ரே' என்ற பெயரில், பெண்களுக்கான ஆட்டோமேடிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது.
இந்த சூழ்நிலையில், அடுத்த, ஐந்து ஆண்டுகளுக்கு, ஸ்கூட்டர் சந்தையில் மட்டும் கவனம் செலுத்த போவதாக, யமஹா இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, இந்த நிறுவனம் சார்பில், புதிய மோட்டார் சைக்கிள்கள் தற்போதைக்கு வராது என்றே கருதப்படுகிறது. இத்துடன், பெண்களுக்கான ஆட்டோமேடிக் ஸ்கூட்டர் சந்தையில், சற்று மாறுபட்டு, ஆண்களுக்கான ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த, யமஹா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர், அடுத்த ஆண்டு வெளி வருகிறது. இந்த ஸ்கூட்டரில், 125 சிசி திறன் கொண்ட, இன்ஜின் பொருத்தப்பட இருக்கிறது. எடையும், அதிகமாக இருக்கும். ஆண்கள் கையாளும் அளவுக்கு, ஸ்கூட்டரில், புதிய அம்சங்கள் இடம் பெற்று இருக்கும். இந்த ஸ்கூட்டரின் விலை, ரூ.50,000 வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு, யமஹா இந்தியா நிறுவனத்துக்கு போட்டியாக, டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனமும், பியாஜியோ இந்தியா நிறுவனமும், 125 சிசி திறன் கொண்ட ஆட்டோமேடிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.