தேடல்

இணையதள பயன்பாடு தமிழகத்தில் எவ்வளவு?

சென்னை:மதுரை உலகத் தமிழ் சங்கத்தில், கணினி தமிழுக்கென தனிப் பிரிவு உருவாக்கப்படுகிறது, என, தமிழ் வளர்ச்சித் துறை செயலர் ராசாராம் கூறினார்.
சென்னையில், கணினி தமிழ் வளர்ச்சி மாநாட்டை நேற்று துவக்கி வைத்து, அவர் பேசியதாவது:
உலக மக்கள் தொகையில், இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில், 78 சதவீதத்துடன் வட அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இவர்களைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் இருக்கின்றன.
மடிக்கணினி
இந்தியாவில், சராசரியாக 10 சதவீதம் பேரும், தமிழகத்தில், 16.5 சதவீதம் பேரும் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி தான் இதற்கு காரணம்.
இந்தியாவில், இணையதள மொழியில் ஆங்கிலம் தான் முதலிடத்தில் உள்ளது. அடுத்து, இந்தி மொழி உள்ளது. தமிழ் மொழிக்கு 18வது இடம்.
கணினியில் தமிழ் மொழியின் பயன்பாடு குறைவாக இருக்க, பல்வேறு எழுத்துருக்கள் இருப்பதே காரணம்.
தமிழ் இணையதளங்கள், தங்களுக்கென தனி எழுத்துருக்களை கொண்டுள்ளன. இதனால், அந்த எழுத்துரு இருந்தால் தான், இணையதளத்தை பயன்படுத்த முடிகிறது.
இது, இணையதளம் பயன்படுத்துவோர் மத்தியில் சலிப்பை ஏற்படுத்துகிறது.
கணினி தமிழுக்கு ஒருங்குறி (யுனி கோடு) எழுத்துரு வந்துள்ளதால், வலைப்பூக்கள், இணைய இதழ்கள், மின் குழுமங்கள் எண்ணிக்கை பெருகி வருகின்றன.
மதுரையில், உலகத் தமிழ் சங்கம் அமைப்பதற்காக, 100 கோடி ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. உலகத் தமிழ்
சங்கத்தில், கணினி தமிழுக்காக தனிப்பிரிவு அமைக்கப்பட உள்ளது.
கணினி தமிழ்
இதன் மூலம், கணினி
தமிழ் மற்றும் இணையம் குறித்த ஆய்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கணினி தமிழ் வளர்ச்சிக்கு, அரசு மட்டுமே செயல்பட வேண்டும் எனஇருக்கக் கூடாது. தமிழ் மொழியில் ஆர்வம் உள்ள எவரும் முன்வரலாம்.
விக்கிபீடியா
ஆன்மிகம், இலக்கியம், அறிவியல், தொழிற்நுட்பம், கல்வி என, 25 ஆயிரத்துக்கும் அதிகமான தலைப்புகளில் தமிழ் வலைப்பூக்கள், தனியாரால் உருவாக்கப்பட்டுள்ளன.
உலக இணையதள பயன்பாட்டில், தமிழுக்கு தனி இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது. உலகில் உள்ள 285 மொழிகளில், விக்கிபீடியா உள்ளது.
இதில், இந்திய மொழிகளான இந்திக்கு 40வது இடமும், தெலுங்குக்கு 60வது இடமும், தமிழுக்கு 61வது இடமும் கிடைத்து உள்ளது.
இந்திய மொழிகளுக்குள், தமிழ் விக்கிபீடியா மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழில் சிறந்த நூல்களுள் ஒன்றாக, கணினி தமிழ் விக்கிபீடியா நூலுக்கும் பரிசளிக்கப்பட்டுள்ளது.
நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் அறிஞர்களின் 1,478 நூல்கள் இணையத்தில் இடம் பெற்றுள்ளன.
இவ்வாறு ராசாராம் கூறினார்.
மாநாட்டில் வரவேற்புரையாற்றிய சென்னை பல்கலைக் கழக, தமிழ்த் துறை முன்னாள் தலைவர் தெய்வசுந்தரம்,
கணினி தமிழ் வளர்ச்சியை இயக்கமாக மாற்ற வேண்டும், என, கேட்டுக் கொண்டார்.
தஞ்சை தமிழ்ப் பல்கலை துணைவேந்தர் திருமலை, முன்னாள் துணைவேந்தர் கருணாகரன், தமிழக அரசின் மொழி பெயர்ப்புத் துறை இயக்குனர் அருள் நடராசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.