தேடல்

இந்து சமய அறநிலைய துறை உத்தரவுக்கு தடைகோரி நித்யானந்தா தரப்பில் மனு

சென்னை:திருவண்ணாமலையில் உள்ள, நித்யானந்தா தியானபீடத்துக்கு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நித்யானந்தா தியானபீடத்தின் மேலாளர், நித்ய பிரானந்தா, தாக்கல் செய்த மனு:திருவண்ணாமலையில், 2.83 ஏக்கர் நிலம், சவுந்தரராஜன் என்பவரால், நன்கொடையாக வழங்கப்பட்டது. நித்யானந்தாவின் பெயரில், இந்த நிலம் உள்ளது. 2008ம் ஆண்டு, ஏப்., மாதம் நித்யானந்தா தியானபீடம், இந்த இடத்தை, குத்தகைக்கு எடுத்தது.
கர்நாடக மாநிலம், பிடதியில், நித்யானந்தா தியானபீட அறக்கட்டளையின் தலைமை அலுவலகம் இயங்குகிறது. திருவண்ணாமலைக்கு, சோதனை அடிப்படையில், கடந்த, ஜூன் மாதம், தலைமை அலுவலகத்தை மாற்றினோம். பின், கடந்த ஆக., மாதம், பிடதிக்கே, தலைமை அலுவலகத்தை மாற்றிவிட்டோம். இரண்டு மாதங்களுக்கும் குறைவாகவே, திருவண்ணாமலையில் தலைமை அலுவலகம் இயங்கியதால், வரிகளுக்கு உட்படுத்தவில்லை. இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் வரம்புக்குள், எங்கள் அறக்கட்டளை வருவதாக கூறி, எங்களுக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
எங்கள் அறக்கட்டளைக்கு எதிராக, ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது, என, கேட்டு, இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. திருவண்ணாமலையில் உள்ள, அறநிலையத் துறை ஆய்வாளரின் அறிக்கை அடிப்படையில், இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கை, எங்களுக்கு வழங்கப்படவில்லை. நேரில் இடத்தை ஆய்வு செய்யவில்லை. இணையதளத்தில் இருந்த தகவல்களை பரிசீலித்து, அறிக்கை அளிக்கப்பட்டதாக தெரிகிறது.இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் கீழ், எங்கள் அறக்கட்டளை வருவதாக, அறநிலையத் துறையின் உதவி கமிஷனர், முன்கூட்டியே முடிவெடுத்துவிட்டார். எனவே, எங்களிடம் விளக்கம் கோருவது,வெறும் கண் துடைப்புக்காக தான்.திருவண்ணாமலையில் உள்ள எங்கள் இடம், இந்துக்கள் மட்டுமின்றி எல்லா மதத்தினரும் வழிபடும் இடமாக, அறக்கட்டளையின் பயனாளிகளில் எந்த வேறுபாடும் இல்லாமல் இருக்கிறது. அன்னதானம், இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகின்றன.யோகாசனம், தியானம் ஆகியவற்றை பரப்புவதற்காக, எங்கள் அறக்கட்டளை துவங்கப்பட்டன. நித்யானந்தாவின் பிறந்த தினத்தை, விழாவாக கொண்டாடுகிறோம். இந்து மதம் தொடர்பான பூஜைகள், இங்கு நடத்தப்படவில்லை.
எங்கள் இடத்தில் இருப்பது, கொடிக் கம்பம் தான். கொடி மரம் அல்ல. அவசரகதியில், உதவி கமிஷனர், நடவடிக்கை எடுத்துள்ளார். எனவே, இந்து சமய அறநிலையத் துறையின் உதவி கமிஷனர் பிறப்பித்த நோட்டீசுக்கு, தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி என்.பால்வசந்தகுமார் முன், விசாரணைக்கு வந்தது. மனுவை, வேறு நீதிபதியின் முன், விசாரணைக்குப் பட்டியலிடுமாறு, தலைமை நீதிபதிக்கு, நீதிபதி பால்வசந்தகுமார், அனுப்பி வைத்தார்.