தேடல்

இந்தியாவின் கச்சா பாமாயில் இறக்குமதி உயரும்:இந்தோனேஷியாவின் வரி குறைப்பால்...

ஜகார்த்தா:இந்தோனேஷிய அரசு, கச்சா பாமாயில் மீதான ஏற்றுமதி வரியை, 9 சதவீதத்தில் இருந்து, 7.5 சதவீதமாக குறைத்துள்ளது. இதனால், இதன் விலை கிலோவிற்கு, 2 ரூபாய் வரை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரி குறைப்பு, வரும் 2013ம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது.


முதல் இடம்:உலகில், பாமாயில் உற்பத்தியில் இந்தோனேஷியா முதல்இடத்தில் உள்ளது. எனினும், இந்நாடு, கச்சா பாமாயில் ஏற்றுமதியை கட்டுப்படுத்தி, உள்நாட்டில், பாமாயில் சுத்திகரிப்பு துறை வளர்ச்சி காண்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.


இதையடுத்து, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கச்சா பாமாயில் ஏற்றுமதி மீதான வரியை, 19 சதவீதமாக உயர்த்தியது.அதே சமயம், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான ஏற்றுமதி வரியை, 9 சதவீதமாக குறைத்தது. இதனால், உள்நாட்டில் பாமாயில் சுத்திகரிப்பு துறை எழுச்சி கண்டது.


ஏற்றுமதி வரி:இந்நிலையில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் உற்பத்தி பெருகியதாலும், சர்வதேச போட்டியை சமாளிக்கும் நோக்கிலும் இந்தோனேஷிய அரசு, கச்சா பாமாயில் மீதான ஏற்றுமதி வரியை படிப்படியாக குறைக்கத் துவங்கியது.கடந்த செப்டம்பர் மாதம், கச்சா பாமாயில் ஏற்றுமதி வரி, 13.5 சதவீதத்தில் இருந்து, 9 சதவீதமாக குறைக்கப்பட்டது.


இந்நிலையில், தற்போது, மீண்டும் வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது.கச்சா பாமாயிலை தொடர்ந்து, சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான ஏற்றுமதி வரியும், மூன்று சதவீதத்தில் இருந்து, இரண்டு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.


இந்தோனேஷியா, ஒவ்வொரு மாதமும், சர்வதேச நிலவரத்திற்கேற்ப பாமாயில் ஏற்றுமதி விலையை மாற்றி அமைத்து வருகிறது. கடந்த எண்ணெய் பருவத்தில் (அக்.,-செப்.,), இந்தோனேஷியாவின் கச்சா பாமாயில் உற்பத்தி, 6-10 சதவீதம் அதிகரித்து, 2.50 - 2.60 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.


மலேஷியா:பாமாயிலை பொறுத்தவரை, இந்தோனேஷியாவிற்கு கடும் போட்டியாக மலேஷியா உள்ளது. மலேசியாவில், கச்சா பாமாயில் உற்பத்தியும், கையிருப்பும் அதிகரித்துள்ளது.இதனால், இந்நாடு, வரும் ஜனவரியில் கச்சா பாமாயில் மீதான ஏற்றுமதி வரியை அடியோடு நீக்க முடிவு செய்துள்ளது.இதன் காரணமாகவே, இந்தோனேஷிய அரசும், பாமாயில் மீதான ஏற்றுமதி வரியை வெகுவாக குறைத்துள்ளது.


இந்தோனேஷியாவின் கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான ஏற்றுமதி வரி குறைக்கப்பட்டிருப்பது, இந்திய இறக்குமதியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் மிகவும் பயன் அளிப்பதாக இருக்கும் என, இந்திய எண்ணெய் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.உற்பத்தி:உள்நாட்டில், தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, சமையல் எண்ணெய் உற்பத்தி இல்லாததால், நம் நாடு மிக அதிக அளவில், கச்சா பாமாயிலை இறக்குமதி செய்து வருகிறது.


தற்போது, உள்நாட்டில், தாவர எண்ணெய்க்கான தேவை, 1.55 கோடி டன்னாக உள்ளது.இந்தியா, 90 லட்சம் டன்னுக்கும் அதிகமாக, தாவர எண்ணெய் வகைகளை இறக்குமதி செய்து வருகிறது. குறிப்பாக, இந்தோனேஷியாவிலிருந்து, மிக அதிக அளவில் தாவர எண்ணெய் வகைகள், இறக்குமதியாகின்றன.