தேடல்

இரானி கோப்பை: சேவக் கேப்டன் * ஸ்ரீசாந்த், ஹர்பஜனுக்கு வாய்ப்பு

பெங்களூரு:இரானி கோப்பை போட்டிக்கான, ரெஸ்ட் ஆப் இந்தியா அணியின் கேப்டனாக சேவக் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.நடப்பு ரஞ்சி கோப்பை சாம்பியன் மும்பை, ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதும் இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி, பிப். 6-10ம் தேதி வரை மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்கான, 14 பேர் கொண்ட ரெஸ்ட் ஆப் இந்தியா அணியை, அனைத்து இந்திய சீனியர் தேர்வுக்குழு கமிட்டி, பெங்களூருவில் நேற்று தேர்வு செய்தது.சேவக் கேப்டன்:கேப்டனாக, அதிரடி துவக்க வீரர் சேவக் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன், ஷிகர் தவான், முரளி விஜய் உள்ளிட்ட துவக்க வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். சமீபத்தில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்ட சேவக், அடுத்து வரவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் சாதிக்கும் பட்சத்தில், டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கலாம். பார்மின்றி தவித்து வரும் கவுதம் காம்பிர் தேர்வு செய்யப்படவில்லை.ஸ்ரீசாந்த் வாய்ப்பு:காயத்தில் இருந்து குணமடைந்த வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், இரானி கோப்பையில் விளையாட உள்ளார். அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், சிறப்பாக செயல்படும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடலாம். மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜாவும் இடம் பிடித்துள்ளார். உடற்தகுதி பிரச்னை காரணமாக ஜாகிர் கான், உமேஷ் யாதவ் உள்ளிட்ட வேகங்கள் தேர்வு செய்யப்படவில்லை.பாண்டே தேர்வு:ரஞ்சி கோப்பை தொடரில், 8 போட்டியில் 48 விக்கெட் கைப்பற்றி, அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த மத்திய பிரதேச அணியின் ஈஷ்வர் பாண்டே, இரானி கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்றொரு மத்திய பிரதேச அணி வீரர் ஜலஜ் சக்சேனாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.தோனி இல்லை:தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்றதால், இந்திய கேப்டன் தோனி, விருப்ப ஓய்வை பெற்றுக் கொண்டார். இதனால் விக்கெட் கீப்பராக விரிதிமன் சகா, தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அசத்திய சுரேஷ் ரெய்னா, ஷமி அகமது ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பெங்கால் வீரர் மனோஜ் திவாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ரெஸ்ட் ஆப் இந்தியா அணி: சேவக் (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான், முரளி விஜய், மனோஜ் திவாரி, விரிதிமன் சகா, ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த், பிரக்யான் ஓஜா, ஈஷ்வர் பாண்டே, அபிமன்யு மிதுன், அம்பதி ராயுடு, ஷமி அகமது, ஜலஜ் சக்சேனா.இரண்டு பயிற்சி போட்டிஅடுத்த மாதம், இந்தியா வரவுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில், பிப். 22ம் தேதி துவங்குகிறது. இப்போட்டிக்கு முன், ஆஸ்திரேலிய அணி, பி.சி.சி.ஐ., பிரசிடென்ட் லெவன் (பிப். 12-13) மற்றும் இந்தியா ஏ (பிப். 16-18) அணிகளுக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கிறது. பிரசிடென்ட் லெவன் அணிக்கு, தமிழக வீரர் அபினவ் முகுந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா ஏ அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பிரசிடென்ட் லெவன் அணி: அபினவ் முகுந்த் (கேப்டன்), ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, மந்தீப் சிங், கேதர் ஜாதவ், பார்த்திவ் படேல், ஸ்டூவர்ட் பின்னி, சரப்ஜித் லட்டா, பர்வீஸ் ரசோல், ஷமி அகமது, பர்விந்தர் அவானா, காம்லேஷ் மக்வனா.இந்தியா ஏ அணி: ஷிகர் தவான் (கேப்டன்), ரோகித் சர்மா, மனோஜ் திவாரி, அஜின்கியா ரகானே, ஜிவான்ஜ்யோத் சிங், கவுதம், ராகேஷ் துருவ், ஜலஜ் சக்சேனா, மன்பிரீத் கோனி, வினய் குமார், தவால் குல்கர்னி, அசோக் மனேரியா.