தேடல்

இலவச வீட்டுமனை பட்டா காலவரம்பு நீட்டிக்கப்படுமா? அமைச்சர் தகவல்

சென்னை:இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கான காலக்கெடு முடிந்தாலும், அதன் கால வரம்பை நீட்டிப்பு செய்ய, முயற்சிகள் நடந்து வருகின்றன. விரைவில், முதல்வர், உரிய முடிவை எடுத்து அறிவிப்பார், என, வருவாய்த் துறை அமைச்சர் வெங்கடாசலம் கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
பாலபாரதி - மார்க்சிஸ்ட்:இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான காலக்கெடு, கடந்த செப்டம்பருடன் முடிந்து விட்டது. இந்த தேதியை நீட்டிப்பு செய்ய, அரசு முயற்சிக்க வேண்டும்.
வெங்கடாசலம் - வருவாய்த் துறை அமைச்சர்: இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கான கால வரம்பை, நீட்டிப்பு செய்யும் எண்ணம் அரசிடம் உள்ளது. இது குறித்து, முதல்வர், உரிய முடிவை எடுத்து அறிவிப்பார்.
பாலபாரதி: அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தால், அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை என, கூறுகின்றனர். இந்ததிட்டம் ரத்து செய்யப்படும் என, ஏற்கனவே அ.தி.மு.க., வாக்குறுதி அளித்துள்ளதையும், அரசு ஊழியர், ஆசிரியர் சுட்டிக் காட்டுகின்றனர்.
சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும், 10 சதவீத பணம் எங்கு போகிறது என்றும், அவர்களுக்கு தெரியவில்லை. இந்த விவகாரத்தில், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதுள்ள திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
பன்னீர்செல்வம் -நிதியமைச்சர்: பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், அனைத்து மாநிலங்களிலும், அமலில் உள்ளது. எனினும், இத்திட்டம், தமிழக அரசின் ஆய்வில் உள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.