தேடல்

ஊழலை ஒழிக்காவிட்டால் கட்சி சீர்குலைந்து விடும்: சீன அதிபர் எச்சரிக்கை

பீஜிங்: சீன கம்யூனிஸ்ட் கட்சியில் ஊழலை ஒழிக்காவிட்டால், கட்சி சீர்குலைந்து விடும் என சீன அதிபர் ஹூ ஜின்டாவ் தெரிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவரே சீன அதிபராகவும் பதவி வகிக்கிறார். இந்நிலையில், பத்து ஆண்டுகளுக்குப்பிறகு புதிய தலைவர் தேர்வு பீஜிங்கில் உள்ள கிரேட் ஹாலில் நடந்தது. இதில் புதிய தலைவராக, தற்போதைய துணை அதிபர் ஜி ஜிங்பிங் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதே போல், பிரதமராக, தற்போதைய துணை பிரதமர் லி கெயூகாங் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்குகொண்டு, தனது ஆட்சிக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் குறித்து சீன அதிபர் ஹூ ஜின்டாவ் பேசினர்.

அப்போது அவர் கூறுகையில், ஊழலை ஒழிப்பதற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சி இடைவிடாமல் செயலாற்ற வேண்டும். மேலும், கட்சியினரிடையே ஒற்றுமையை வளர்க்க வேண்டும். ஊழலுக்கு எதிரான முயற்சி மற்றும் அரசியல் ஒற்றுமை மட்டுமே, கட்சியின் நீண்ட கால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதில் நாம் தவறு செய்வோமானால், அது கட்சிக்கு மிகவும் கேடாக அமைவதுடன், கட்சி சீர்குலையவும் வாய்ப்பாக அமைந்து விடும் என்று தெரிவித்துள்ளார்.

சுமார் 2270 பிரதிநிதிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் தனது 41 பக்க உரையை நிகழ்த்திய ஜின்டாவ், அனைத்து நேரங்களிலும், அனைத்து இடங்களிலும் ஊழலை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதற்காக நாட்டில் அதிரடி ரெய்டுகள் நடத்தப்படவேண்டும். கட்சியின் விதிகள் மற்றும் மாகாண விதிகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் கொஞ்சமும் இரக்கமின்றி சட்டத்தின் முன் கொண்டு வரப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.