தேடல்

ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தும் காத்ரியுடன் பேச்சு நடத்த குழு அமைப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில்,ஜனநாயகம் கோரி, போராட்டம் நடத்தி வரும், தாகிர் உல்-காத்ரியுடன் பேச்சு வார்த்தை நடத்த, முக்கிய கட்சி தலைவர்களை கொண்ட குழு, அமைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஊழல் பெருத்து விட்டதால், பாகிஸ்தான் அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என, தேரிக்-மின் ஹஜ்-உல்-குரான் கட்சியின் நிறுவனர், தாகிர் உல்-காத்ரி, கடந்த, நான்கு நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்.சூபி அமைப்பின் தலைவரான காத்ரி,பாகிஸ்தானில் உண்மையான ஜனநாயகம் அமைய, தேர்தல் சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும். தற்போதைய ஊழல் அரசு, உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால், எகிப்து, துனிசியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளை போல, பாகிஸ்தானிலும், தொடர் கிளர்ச்சியில் ஈடுபடுவோம், என,எச்சரித்துள்ளார்.லாகூரில் இவர் தொடங்கிய கண்டன ஊர்வலம், தற்போது, இஸ்லாமாபாத்தில், பார்லிமென்ட்டை முற்றுகையிட்டுள்ளது.ஊழல் வழக்கில், பிரதமர் அஷ்ரப்பை கைது செய்ய சொல்லி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த பிரச்னைக்கிடையே, காத்ரியின் தொடர் போராட்டம், பாகிஸ்தான் அரசுக்கு, சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இவரை கைது செய்ய, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காத்ரியை கைது செய்தால், நிலைமை மோசமாகும், என்பதால், அவரை கைது செய்வதற்கு பதில், பேச்சு வார்த்தை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, மத விவகாரத்துறை அமைச்சர் குர்ஷித் ஷா தலைமையில், முக்கிய கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், காத்ரியுடன்,இன்று பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.எழுத்து பூர்வமாக உறுதி அளிக்கும் வரை, பார்லிமென்ட் பகுதியிலிருந்து நகர மாட்டோம்; பேச்சு வார்த்தையில், உள்துறை அமைச்சர் பங்கேற்பதை ஏற்க முடியாது, என, காத்ரி தெரிவித்துள்ளார்.