தேடல்

எங்களை கேவலமாக பேசுவதா? விபசாரிகள், அரவாணிகள் மனித உரிமை கமிஷனில் புகார்

கோல்கட்டா:அரசியல்வாதிகள் கேவலமாக பேசுவதால், அவர்களின் இழிவான பேச்சுகளில் இருந்து காக்க வேண்டும் என வலியுறுத்தி, கோல்கத்தா நகர விபச்சாரிகளும், அரவாணிகளும், மாநில மனித உரிமைகள் கமிஷனை நாடியுள்ளனர்.பரபரப்பு அரசியலுக்கு பஞ்சமில்லாத மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் அதன் தோழமை கட்சிகளுக்கும் இடையே, வார்த்தை போர் நடந்து வருகிறது.
வெறும் வார்த்தைகளால் ஆன மோதல், அவ்வப்போது, நேருக்கு நேர் தாக்குதலாகவும் மாறி விடுகிறது.நிலைமை இவ்வாறு இருக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், தோழமை கட்சிகளில் ஒன்றான, பார்வர்டு பிளாக் தலைவர், அனில் பிஸ்வாஸ், சில நாட்களுக்கு முன், திரிணமுல் காங்கிரஸ் கட்சியை வசைபாடினார்.அப்போது, திரிணமுல் காங்கிரஸ் கட்சி, அரசியல் விபச்சாரி ஆகிவிட்டது என அவர் கூறியிருந்தார். அதற்கு பதிலடியாக, திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர், பிர்ஹத் ஹக்கீம் கூறும் போது, பார்வர்டு பிளாக் கட்சி, அரவாணிகளின் கூடாரமாக மாறி விட்டது என தெரிவித்தார்.இதனால் கோபமடைந்த விபசாரிகளும், அரவாணிகளும், மாநில மனித உரிமைகள் கமிஷனிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.சட்டத்தை இயற்றி, அதை நிலைநாட்ட வேண்டிய அரசியல்வாதிகளும், அமைச்சர்களும், எங்களை இழிவாக பேசினால், சாதாரண மக்கள் எங்களை எப்படி மதிப்பர்? நாங்களும் மனிதர்கள் தானே? சக மனிதர்களை கீழாக சித்தரிக்க, விபச்சாரி என்றும், அரவாணி என்றும் கூறுவது, எந்த விதத்தில் நியாயம்? என, அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
விபச்சாரிகள் சங்க தலைவர், பாரதி தேவி இது குறித்து கூறுகையில், எங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், அவர்களை பார்த்து பிறரும் அது போன்ற அநாகரிக வார்த்தைகளை பயன்படுத்த மாட்டார்கள், என்றார்.அரவாணிகள் சங்க பொது செயலர் கூறும் போது, அமைச்சரின் பேச்சு, அரவாணிகளை இழிவுபடுத்தி விட்டது; அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.அவர்கள் கோரிக்கை நியாயமானது தான். அவர்களும் மனிதர்கள் தானே! மனிதர்களை மனிதர்கள் கேவலமாக பேச கூடாது. இழிவான செயல் புரிபவர்களை இனிமேல், விலங்குகளின் பெயர் சொல்லி அழைப்பது தான் சரியாக இருக்கும். ஏனெனில், அவை தான் எதிர்ப்பு குரல் கொடுக்காது என, காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கூறினார்.