தேடல்

எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில்பதட்டத்தினை தணிக்க பாக். ஒப்புதல்: உள்நாட்டு அரசியல் குழப்பத்தால் அடி பணிந்தது

புதுடில்லி:இந்தியா-பாக். இரு தரப்பிலும் பதட்டத்தினை தணித்துக்கொள்ளும் விதமாக இரு தரப்பிலும் தற்போது சுமூகநிலை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 8-ம் தேதி இந்தியா-பாக்.எல்லைகட்டுப்பாட்டு கோடு பகுதியான பூஞ்ச் மாவட்டத்தில் பாக். ராணுவத்தினர் அத்துமீறினர். இரு இந்திய வீரர்களை கொடூரமாக கொன்று தலையை துண்டித்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நேற்று பேட்டியளித்த பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தானுடன் இனி இயல்பான உறவு இல்லை என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் இரு தரப்பிலும் பிரிகேடியர் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடந்தது. அதன்பின்னரும் பாகிஸ்தான் 4முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது.
பதட்டத்தினை தணிக்க பாக். சம்மதம்
இனிமேலும் பொருத்திருக்க முடியாது என்ற நிலையில் எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயார் இந்திய ராணுவ தலைமை தளபதி பிக்ராம்சிங் கூறினார். இதையடுத்து எல்லையில் பதட்டம் அதிகரித்து வந்தது. இந்நிலையில் இன்று மாலை திடீர் திருப்பமாக பாகிஸ்தான் அடிபணிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பதட்டத்தினை தணிக்க பாக்.முன்வந்துள்ளது.இதனால் ராணுவ நடவடிக்கையினை குறைக்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக பாக். அரசு உத்தரவிட்டதன் பேரில், ராணுவ இயக்குனர் ஜெனரல் வெளியிட்டுள்ள செய்தியில் எல்லையில் இனி போர்நிறுத்தத்தினை தொடர்ந்து மதித்து கண்காணிப்பது எனவும், பதட்டம் ஏற்படாமலும் பாக்.துருப்புகளுக்கு கட்டுபாடு விதித்தும் உத்தரவிட்டுள்ளது.
பின்னணி என்ன ?

இதற்கிடையே பாகிஸ்தானின் உள்நாட்டு புரட்சி வெடித்துள்ளது. அந்நாட்டு பிரதமரை கைது செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளதும், அந்நாட்டின் மதகுருவான தஹிரூல்- கத்ரி என்பவர் அரசுக்கெதிராக மக்களை திரட்டியுள்ளார். அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்என கெடுவிதித்துள்ளார். உடனடியாக ராணுவ ஆட்சியை அமல்படுத்த வலியுறத்தி மூன்று நாட்களாக அறப்போராட்டம் நடத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் இந்தியாவுடன் மோதல் போக்கினை எதிர்கொள்ளமால் பாகிஸ்தான் அடிபணிந்துள்ளளதாக கூறப்படுகிறது.