தேடல்

எல்லை பிரச்னையால் ரோடு அமைவதில் சிக்கல் : முதுகுளத்தூர் அருகே 4 கி.மீ., நடக்கும் அவலம்

முதுகுளத்தூர்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மறவாய்க்குடியில் இரு ஒன்றியங்களின் எல்லை பிரச்னையால், ரோடு அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து வசதியின்றி 4 கி.மீ., தூரம் நடந்து செல்லும் அவலம் நீடிக்கிறது. முதுகுளத்தூர் அருகே பனிவாசல், மறவாய்க்குடியில் 600க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிகளுக்கு முதுகுளத்தூர் ஒன்றியம், பூசேரியில் இருந்து தான், பிரதான ரோடு வசதி உள்ளது. பனிவாசல், மறவாய்க்குடி, மறவாய்க்குடி காலனி ஆகிய கிராமங்கள் கடலாடி ஒன்றியத்திலும், பூசேரி, முதுகுளத்தூர் ஒன்றியத்திலும் உள்ளன. பூசேரி- மறவாய்க்குடி காலனிக்கு இடையே 500 மீட்டர் தூரம். இரு ஒன்றிய எல்லை பிரச்னையால், இணைப்பு ரோடு அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பூசேரி- சிக்கல் செல்லும் வழியில் இரண்டு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் பயணித்து, பூசேரியில் இருந்து 4 கி.மீ., தூரம் பனிவாசல், மறவாய்க்குடி, மறவாய்க்குடி காலனிக்கு நடந்து செல்கின்றனர். இருக்கும் ரோடுகளும், கண்மாய் கரையோரங்களில் அமைக்கப்பட்டுள்ளதால், ஆங்காங்கே சேதமடைந்து, விபத்து அபாயம் நிலவுகிறது.

மறவாய்க்குடி கருப்பையா கூறியதாவது: பூசேரி- மறவாய்க்குடி காலனி வரை, 500 மீட்டர் தூரத்திற்கு ரோடு அமைத்தால், ராமநாதபுரம், முதுகுளத்தூரிலிருந்து இயக்கப்படும் பஸ்கள் பூசேரி வழியாக பனிவாசல், மறவாய்க்குடி, மறவாய்க்குடி காலனிக்கு செல்ல முடியும். ஆனால் முதுகுளத்தூர், கடலாடி ஆகிய ஒன்றியங்களின் எல்லை பிரச்னையால், சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே ரோடு வசதி இல்லை. இப்பகுதி பொதுமக்கள், நடைபயணமாகவும், டூவீலர்களில் சென்று வருகின்றனர். போக்குவரத்து வசதியில்லாததால், இப்பகுதி மாணவர்கள் உயர் கல்வி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட, ஒன்றிய நிர்வாகங்களிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.

முதுகுளத்தூர் எம்.எல்.ஏ., முருகன் கூறுகையில், ரோடு இல்லாதது குறித்து புகார் ஏதும் இல்லை. ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.