தேடல்

ஐந்து பேர் குடும்பத்திற்கு மாதம் ரூ.600 போதும்: டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் பேச்சு

புதுடில்லி:ஐந்து உறுப்பினர்களை கொண்ட குடும்பத்திற்கு, மாதம், 600 ரூபாய் இருந்தால் போதும்; அவர்களின், அரிசி, பருப்பு போன்ற, உணவு தேவைகள் நிறைவேறி விடும், என, டில்லி முதல்வர், ஷீலா தீட்ஷித் பேசியுள்ளார். இதற்கு, பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சோனியா தலைமை:@@டில்லியில், நேற்று முன்தினம், அன்னஸ்ரீ யோஜனா என்ற, உணவு பாதுகாப்பு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் நடந்த அந்த விழாவில், டில்லி முதல்வர், ஷீலா தீட்ஷித் பேசியதாவது:அன்னஸ்ரீ யோஜனா, அருமையான திட்டம். இதில், மானிய விலையில் வழங்கப்படும் உணவு பொருட்களுக்கான மானியம், பொதுமக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆதார் அடையாள அட்டை மூலம், பொதுமக்களின் வங்கிக்கணக்கில், 600 ரூபாய் நேரடியாக சென்று சேர்ந்து விடும்.இந்தப் பணத்தை கொண்டு, மிக அழகாக குடும்பம் நடத்த முடியும். ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு, இந்த தொகை போதுமானது. ஆதார் அடையாள அட்டை வைத்துள்ள, குடும்ப உறுப்பினர்களில், மிக மூத்த வயதுடையவரின் கணக்கில், இந்தத் தொகை வரவு வைக்கப்படும்.இவ்வாறு, ஷீலா தீட்ஷித் தெரிவித்தார்.

இதற்கு, பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர், முக்தார் அப்பாஸ் நக்வி கூறும்போது, நூறு ஆண்டுகளுக்கு முன் வேண்டுமானால், இந்த தொகை போதுமானதாக இருக்கலாம். இப்போது, நிச்சயம் போதாது. இது போன்று பேசுவதன் மூலம், ஏழை மக்களை, காங்., அவமரியாதை செய்கிறது, என்றார்.

26 ரூபாய்போதும்:@@பணக்காரர்கள் நிறைந்த காங்., கட்சியில், ஏழைகளுக்கு இடமில்லை என, பொதுவாக கூறப்படுவது உண்டு. காங்., தலைமையிலான, மத்திய அரசின், திட்டக் கமிஷனின், துணை தலைவராக இருக்கும், மாண்டேக் சிங் அலுவாலியா, தனிநபர் உயிர் வாழ, நாள் ஒன்றுக்கு, நகரங்களில், 32 ரூபாயும், கிராமங் களில், 26 ரூபாயும் போதும் என, தெரிவித்திருந்தார்.அதற்கு அப்போதே கடும் எதிர்ப்பு கிளம்பியது; காங்., பொது செயலர், ராகுல் கூட, மாண்டேக் சிங்குக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

நிலைமை இவ்வாறு இருக்க, டில்லி முதல்வர், ஷீலா தீட்ஷித்தும், ஏழை மக்களின் துயரம் பற்றி தெரியாமல், குடும்பத்தை நடத்த, 600 ரூபாய் இருந்தால் போதும் என, தெரிவித்துள்ளது, ஏழைகள் மீது அந்த கட்சிக்கு இருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறது என்கிறார், டில்லி அரசியல் பார்வையாளர் ஒருவர்.

ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு, மாதம், 600 ரூபாய் இருந்தால் போதும் என, திருவாய் மலர்ந்துள்ள ஷீலா தீட்ஷித், மாத சம்பளமாக, ஒரு லட்சம் வரை பெறுகிறார். அவரின் மகனும், கிழக்கு டில்லி தொகுதி, காங்., எம்.பி.,யு மான, சந்தீப் தீட்ஷித், அதே அளவுக்கு பெறுகிறார்.

செழிப்பான குடும்பம்:பஞ்சாபின் பணக்கார குடும்பத்தை சேர்ந்த ஷீலாவின், மறைந்த கணவர், உமாசங்கர் தீட்ஷித், உத்தர பிரதேசத்தின், செல்வ செழிப்பான குடும்பத்தை சேர்ந்தவர்.ஷீலா, சிறு வயது முதல், மக்கள் பிரதிநிதியாகவும், அமைச்சராகவும் இருந்தவர் என்பதால், அவருக்கு சாமானிய மக்களின் துயரம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என, எதிர்க்கட்சி பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.