தேடல்

ஓட்டை பஸ்? பேருந்து பராமரிப்பு குறித்து கருத்து தெரிவிக்கலாம்

மாநகர போக்குவரத்து கழக சேவையை மேம்படுத்த, மக்கள் கருத்தறியும் பணி துவங்கப்பட்டு உள்ளது. இதற்காக, மாநகர போக்குவரத்து கழக இணையதளத்தில் தனி பக்கமும் துவங்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகரில், சாதாரண, விரைவு, தாழ்தள சொகுசு, தொடர் மற்றும் வால்வோ குளிர்சாதன பேருந்து என, பல வகையான பேருந்துகளை, மாநகர போக்குவரத்து கழகம், 748 வழித்தடங்களில், 3,497க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கி வருகிறது.ரூ.2.73 கோடி வருவாய் தினமும், 53.04 லட்சம் மக்கள், மாநகர பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இதன் மூலம், மாநகர போக்குவரத்து கழகம், தினமும், 2.73 கோடி ரூபாய்க்கும் மேலாக வருவாய் ஈட்டுகிறது. போதிய பராமரிப்பின்மை, ஓட்டுனர், நடத்துனர் பற்றாக்குறை, போக்குவரத்து ஊழியர்கள், பயணிகளிடம் கண்ணிய குறைவாக நடப்பது, அடிக்கடி பேருந்து பழுதாகி நடுவழியில் நிற்பது உள்ளிட்ட பல காரணங்களால், மாநகர பேருந்துகள் மீது, பொதுமக்களிடம் நன்மதிப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
அதிருப்திநடப்பாண்டில், அண்ணா மேம்பாலம், சாந்தோம் மற்றும் கந்தன் சாவடி ஆகிய மூன்று இடங்களில், மாநகர பேருந்துகளால் நடந்த விபத்தையடுத்து, மாநகர பேருந்து பயணம் குறித்த, பொதுமக்களின் அதிருப்தி மேலும் அதிகரித்து உள்ளது.
இதை தவிர்க்கவும், மாநகர பேருந்துகளின் தரத்தை உயர்த்தவும், மாநகர போக்குவரத்து கழகம், இணையதளம் மூலம், மக்கள் கருத்தறியும் பணியை துவங்கி உள்ளது.
ஆம், இல்லை மாநகர போக்குவரத்து கழகத்தின் இணையதளத்தில், போக்குவரத்து சேவை பற்றி தனி பக்கம் துவங்கப்பட்டு உள்ளது. அதில், பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன. அவற்றுக்கு ஆம், இல்லை என, பதில் அளிக்கலாம்.
எதற்காக மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளை பயன்படுத்துகிறீர்கள்; ஒரு நடைக்கான பயண நேரம் எவ்வளவு; தேவையான அளவில் பேருந்துகள் உள்ளனவா; பேருந்தின் படிக்கட்டு சரியான உயரத்தில் உள்ளதா; வழித்தட எண் நினைவில் கொள்ளும் வகையில் இருக்கிறதா; ஓட்டுனர், நடத்துனர் கனிவுடன் நடக்கின்றனரா; வழித்தடம், பேருந்து நிறுத்தம், பேருந்து கட்டணம் குறித்த தகவல்கள் பேருந்தில் குறிப்பிடப்பட்டு உள்ளனவா; பேருந்து நிலையங்களில் அறிவிக்கப்படும் புறப்படும், சேருமிடம் உள்ளிட்ட, ஒலிப்பெருக்கி தகவல்கள் நிறைவாக இருக்கின்றனவா? பல வகையான பேருந்துகளுக்கான கட்டணங்கள் பற்றிய விவரங்களை அறிய முடிகிறதா என, பல கேள்விகள் அந்த பக்கத்தில் இடம் பெற்றுள்ளன.தீதீதீ.ட்tஞி.ணிணூஞ் இணையதளத்திற்கு சென்று, எம்.டி.சி., சர்வே லிங்க் என்பதில் கிளிக் செய்து, தங்களது கருத்துகளை பொதுமக்கள் பதிவு செய்யலாம். ண்தணூதிஞுதூட்tஞி@ஞ்ட்ச்டிடூ.ஞிணிட் மின்னஞ்சல் முகவரிக்கும், கருத்துகளை தெரிவிக்கலாம்.மக்களின் கருத்துக்களை தொகுத்து, அதன் அடிப்படையில் தயாராகும் அறிக்கை, அரசுக்கு அனுப்பப்படும். அதை தொடர்ந்து, போக்குவரத்து சேவையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என, மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறினார்.

- நமது நிருபர் -