தேடல்

கச்சா சமையல் எண்ணெய் இறக்குமதி மீது 2.5 சதவீதம் வரி

புதுடில்லி:மத்திய அரசு, இறக்குமதி செய்யப்படும், கச்சா சமையல் எண்ணெய் மீது, 2.5 சதவீதம் வரி விதித்துள்ளது. இதுவரை, இதன் இறக்குமதிக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.உள்நாட்டில், எண்ணெய் பனை விவசாயிகளின் நலன் கருதி, இறக்குமதி செய்யப்படும், கச்சா சமையல் எண்ணெய் மீது, 7.5 சதவீத வரியும், சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் மீது, 15 சதவீத வரியும் விதிக்க வேண்டும் என, மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் தெரிவித்திருந்தார்.


ஆனால், இத்தகைய நடவடிக்கை, பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்து விடும் என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கூறியிருந்தார்.இந்நிலையில், நேற்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில், கச்சா சமையல் எண்ணெய் இறக்குமதி மீது, 2.5 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான வரி, 7.5 சதவீதம் என்ற அளவிலேயே தொடரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2011-12ம் பருவத்தில் (நவ.,-அக்.,), நம் நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, 1.02 கோடி டன்னாக இருந்தது. நடப்பு எண்ணெய் பருவத்தின், முதல் இரண்டுமாதங்களில், இதன் இறக்குமதி, கடந்த ஆண்டின், இதே காலத்தை விட, 5 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டின், மொத்த சமையல் எண்ணெய் தேவையில், 50 சதவீதம் இறக்குமதி வாயிலாக பூர்த்தி செய்யப்படுகிறது.