தேடல்

கடலை சுற்றும் கதைகள்: ஸ்பெஷல் ஸ்டோரி!

சமீபத்தில் வெளிவந்த நீர்ப்பறவை படம் கடலுக்கு அருகில் வாழும் மீனவர்களைப் பற்றியதாக இருந்தது. தற்போது தயாரிப்பில் இருக்கும் பல படங்கள் கடற்புரத்தை கதைக் களமாக கொண்டவையாகவே இருக்கிறது.

விக்ரம், ஜீவா நடிக்கும் டேவிட் படம் கோவா கடற்கரையை மையமாக கொண்டது. இங்கு வாழும் டேவிட் என்ற மீனவராக விக்ரம் நடிக்கிறார். மும்பை கடற்புரத்தில் வாழும் சிதார் இசைக் கலைஞனாக ஜீவா நடிக்கிறார்.

அதேபோல தனுஷ் நடிக்கும் மரியான் படமும் கடற்புரத்து கதைதான். இதில் தனுஷ் மீன்பிடிக்கத் தேவையான படகுகளைச் செய்பவராக நடித்து வருகிறார். பாமா மீனவப் பெண்ணாக நடிக்கிறார். மணிரத்னம் இயக்கும் கடல் முழுக்க முழுக்க கடற்புரத்து காதல் கதை. வசந்த் இயக்கி வரும் மூன்று பேர் மூன்று காதல் படத்தில் 3 காதல் கதைகள். அதில் ஒரு கதை நாகர் கோவில் கடற்புரத்துக் கதை. கடற்புரத்து நர்சாக தாமிரபரணி பானு நடித்திருக்கிறார். சமீபத்தில் தமிழிலும் வெளியான லைப் ஆப் பை ஆங்கிலப் படமும் முழுக்க முழுக்க கடலிலேயே நடக்கும் கதைதான்.

தமிழில் வெளியான கடற்புரத்து கதைகள் பெரும்பாலும் வெற்றி பெற்றுவிடும். அலைகள் ஓய்வதில்லை, கடலோர கவிதைகள், கடல் மீன்கள், எம்.ஜி.ஆர் நடித்த படகோட்டி, மீனவ நண்பன் என நிறையப் படங்களைச் சொல்லலாம். ஆனாலும் இப்போது தயாராகி வரும் படங்கள் கடலோரத்தில் தயாராவதற்கு காரணம், கடற்கரை பிரதேச கதைகளை பிரமாண்டமாக காட்சிப்படுத்தலாம். கடற் பிரதேசங்கள் இங்கு அதிகம். மழை எப்படி ஒரு காட்சியின் கனத்தை அதிகப்படுத்துமோ அப்படியே கடலும் அதிகப்படுத்தும். இப்படி நிறைய காரணம் சொல்கிறார்கள். ஆனாலும் இப்போது கடற்புரத்து கதைகள் அதிகமாக எடுக்கப்படுவது யதேச்சையான ஒன்று என்றும் கூறுகிறார்கள்.

கடல்ல படம் எடுத்தாலும் கதை இருந்தாத்தான் கரை சேரும்...!