தேடல்

கப்டில் சதம்: நியூசி., வெற்றி

ஈஸ்ட் லண்டன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டுவென்டி-20 போட்டியில், மார்டின் கப்டில் சதம் அடித்து கைகொடுக்க, நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டுவென்டி-20 தொடரில் விளையாடுகின்றன. டர்பனில் நடந்த முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி ஈஸ்ட் லண்டனில் நடந்தது.

டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கலம், பீல்டிங் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு ஹென்றி டேவிஸ் (55), கேப்டன் டுபிளசி (63), டேவிட் மில்லர் (33) கைகொடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து சார்பில் பிரேஸ்வெல் 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின், 19 ஓவரில் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மார்டின் கப்டில் (101*) சதம் அடித்து கைகொடுக்க, 19 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டுவென்டி-20 தொடர் 1-1 என சமநிலை வகிக்கிறது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி டிச. 26ல் போர்ட் எலிசபெத் நகரில் நடக்கவுள்ளது.