தேடல்

கற்பழிப்பு குற்றம் : ‘காயடிப்பு’ க்கு ஜெ., ஆதரவு ; தூக்கு தண்டனை வழங்கவும் பரிந்துரை

சென்னை: சமீபத்தில் பரவலாக பேசப்படும் கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை வழங்குவதுடன் அவர்களுக்கு ரசாயான முறையில் ஆண்மை நீக்கம் ( காயடிப்பு ) செய்யப்பட வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெ., கூறியுள்ளார்.

டில்லியில் மாணவி கற்பழிப்பு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் கற்பழிப்பு தொடர்பாக சட்ட மாற்றங்கள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முனைந்து செயல்பட்டு வருகிறது. என்ன மாதிரியான சட்டங்கள் இயற்றலாம் என்றும் சட்ட திருத்தம் குறித்தும் அரசியல் கட்சிகளின் ஆலோசனை மற்றும் கருத்துக்களை மத்திய அரசு கோரியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்குவங்க முதல்வர் மம்தா விரைவு கோர்ட் மற்றும் பெண்கள் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை விரைவுப்படுத்துதல் என நடவடிக்கைகள் எடுத்தார்.இது பற்றி மத்திய அரசுக்கு

அளித்த பரிந்துரைகளில் காங்கிரஸ் கட்சி, குற்றவாளிகளுக்கு ரசாயன

காயடிப்பு செய்ய வேண்டும் என்பதும் ஒன்று.

இந்நிலையில் இன்று கற்பழிப்பு குற்றம் தொடர்பாக முதல்வர் ஜெ., ஒரு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது: பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளை யாராலும் ஏற்க முடியாது. பெண்கள் அச்ச உணர்வு இல்லாமல் வாழ வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கும். இதற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும். கற்பழிப்பு சம்பவம் நடக்காமல் தடுக்க போதிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும். சிறப்பு மகளிர் போலீஸ் மூலம் நாள்தோறும் விசாரணை நடத்தப்படும்.


24 மணி நேர தொலைபேசி சேவை:
இந்த வழக்கு மகளிர் விரைவு கோர்ட்டில் நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்படும். கற்பழிப்பினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ செலவை அரசே ஏற்கும். குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்க முடியாத அளவிற்கு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். குண்டர் சட்டம் திருத்தி அமைக்கப்படும். இது தொடர்பான புலன் விசாரணை மேற்கொள்ளப்படும். விசாரணையை கண்காணிக்க மண்டல தலைவர் தலைமையில் ஒரு ஆய்வுக்குழுவும் அமைக்கப்படும். 24 மணி நேர தொலைபேசி சேவை உருவாக்கப்படும். அரசு அலுவலகங்களில் காமிரா பொருத்தப்படும்.

மேலும் கற்பழிப்பு குற்றம் தொடர்பாக குற்றவாளிகளுக்கு அதிக பட்டமாக தூக்கு தண்‌டனை வழங்குவது, மற்றும் அவர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் ( காயடிப்பு) க்கு மத்திய அரசிடம் கேட்டு கொள்ளப்படும். இவ்வாறு ஜெ., கூறியுள்ளார்.

ரசாயன காயடித்தல் என்றால் என்ன? : காயடித்தல் என்பது ஆண்கள் என்றால் விதைப் பையை நீக்குதல், பெண்கள் என்றால் கருப்பையை நீக்குதல். டாக்டர்கள் தான் இதை செய்ய முடியும். ரசாயன காயடித்தல் என்பது இதில் இருந்து மாறுபட்டது. பாலியல் உணர்வை தூண்டும் ஆன்ட்ரோஜன் ஹார்மோனுக்கு எதிரான சைப்ரோடெரோன் அசிடேட், மெட்ரோசைப்ரோஜெஸ்ட்ரோன் போன்ற மருந்துகளை ஆண்களுக்கு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வீதம், ஒரு ஆண்டுக்கு செலுத்த வேண்டும். இதன் பிறகு அந்த ஆணுக்கு பாலியல் இச்சையோ வன்முறை சிந்தனையோ ஏற்படாது. ஆனால் இதில் இன்னொரு ரிஸ்க் இருக்கிறது. மீண்டும் மாற்று மருந்து கொடுத்து, மீண்டும் பழைய நிலையை ஏற்படுத்தலாம்.


பக்க விளைவுகள்: இம்மருந்தை கொடுப்பதில் சில பக்க விளைவுகள் ஏற்படும். நாளாக நாளாக இதய நோய், எலும்பு உதிர்தல் போன்ற நோய் ஏற்படலாம். சில ஆண்களுக்கு, பெண்களைப் போல் மார்பகம் வளர்ச்சி அடையலாம். முடிகள் உதிரும். அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த தண்டனை சட்டப்பூர்வமாக பின்பற்றப்படுகிறது.