தேடல்

கலாச்சார பயங்கரவாதம் தான் ஒழிக்கப்பட வேண்டும்! விஸ்வரூபம் தடைக்கு கமல் பதில்!!

கலைஞர்கள் மீது திணிக்கப்படும் கலாச்சார பயங்கரவாதம் தான் ஒழிக்கப்பட வேண்டும் என்று விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்தது குறித்து கமல் விளக்கம் அளித்துள்ளார்.கமல்ஹாசன் நடித்து, இயக்கி ஹாலிவுட் தரத்திற்கு பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கும் படம் விஸ்வரூபம். கமல் ஜோடியாக ஆண்ட்ரியா, பூஜா குமார் நடித்துள்ளனர். பயங்கரவாதத்தை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் ஆரம்பத்ததில் இருந்தே பல்வேறு பிரச்னைகள் கமலுக்கு தொடர்ந்து கொண்டே இருந்தன.

டி.டி.எச். பிரச்னை : இந்நிலையில் படத்தை முடித்து ரிலீஸ் செய்யலாம் என்று இருந்தநிலையில், தனது படத்தை டி.டி.எச்.இல் வெளியிடப்போவதாக கமல் அறிவித்தார். இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, பின்னர் அவர்களுடன் ஏற்பட்ட சமரச பேச்சால் தனது டி.டி.எச். முயற்சியை தியேட்டரில் வெளியான ஒருவாரத்திற்கு பின்னர் ரிலீஸ் செய்வதாக அறிவித்தார். படமும் நாளை 25ம் தேதி தமிழகம் முழுக்க சுமார் 500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆக இருந்தது.

முஸ்லீம் அமைப்பு எதிர்ப்பு :இதற்கிடையே, விஸ்வரூபம் படத்தில், முஸ்லிம்களை தீவிரவாதிகள் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவே, படத்தை வெளியிடுவதற்கு முன், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு படத்தை திரையிட வேண்டும். விமர்சனத்துக்குரிய காட்சிகள் இருந்தால், அவற்றை நீக்கிவிட்டு, படத்தை வெளியிட வேண்டும் என, முஸ்லிம் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நடிகர் கமல், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு படத்தை திரையிட்டுக் காட்டினார். படத்தை பார்த்த முஸ்லிம் அமைப்பினர், முஸ்லிம்கள் தீவிரவாதிகள் போல் சித்தரிக்கப்பட்டு உள்ளனர். எனவே, படத்தை தடை செய்யவேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். மேலும் விஸ்வரூபம் தடை செய்ய வேண்டும் என, சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் உள்துறை செயலரிடம், முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு மனு அளித்துள்ளது. இப்படத்தை எதிர்த்து 23ம் தேதி(வியாழன்) மாலை ஆர்பாட்டம் நடத்தப் போவதாக, முஸ்லிம் அமைப்புகள் கூறியிருந்தன. ஒரு வேளை படம் வெளியிடப்பட்டால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுமா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

15 நாட்கள் தடை : இதனையடுத்து இப்படத்தை வெளியிட, 15 நாட்கள் தடை விதிக்குமாறு, அரசு தரப்பில் இருந்து, மாவட்ட கலெக்டர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட கலெக்டர்களும், இப்படத்திற்கு, 15 நாட்களுக்கு வெளியிட தடை விதித்துள்ளனர்.இந்த, 15 நாட்களில், விஸ்வரூபம் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டு, அதன் பின் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

கமல் விளக்கம் : விஸ்வரூபம் படத்தை தடை செய்தது குறித்து நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, எனது விஸ்வரூபம் படத்தை தடை செய்தது சட்டவிரோதமானது. அரசியல் லாபத்திற்காக சிலர் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று சதி செய்கின்றனர். விஸ்வரூபம் படம் நிச்சயம் முஸ்லிம்களுக்கு எதிரான படம் அல்ல. தொடர்ந்து ஒரு கலைஞனை காயப்படுத்துவது மிகவும் வேதனையாக உள்ளது. முதலில் ஒரு கலைஞன் மீது திணிக்கப்படும் கலாச்சார பயங்கரவாதத்தை தான் முற்றிலும் ஒழிக்க வேண்டும். எனது படத்துக்கான தடையை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்று கூறியுள்ளார்.

முதல்வரை ‌சந்திக்கிறார்? : விஸ்வரூபம் படத்தை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட் கலைஞர்களுக்கு திரையிட்டு காட்டுவதற்காக கமல் லாஸ்ஏஞ்சல்ஸ் புறப்பட்டு சென்றுள்ளார். இதனால் கமல் 26ம் தேதியோ, 27ம் தேதியோ சென்னை வருவார் என தெரிகிறது. சென்னை வந்த உடன் முதல்வரை சந்தித்து இப்படம் குறித்து விளக்கம் அளிப்பார் என தெரிகிறது.

டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணம் திரும்ப ஒப்படைப்பு : படம் நாளை(25ம்தேதி) ரிலீஸ் ஆக இருந்த நிலையில் ஏராளமானபேர் விஸ்வரூபம் படத்திற்கு முன்பதிவு செய்து இருந்தனர். ஆனால் இப்போது படம் இரண்டு வார காலத்திற்கு தடை செய்யப்பட்டு உள்ளது. ஆ‌கையால் முன்பதிவு செய்தவர்களின் பணத்தை திரும்பி கொடுக்க தியேட்டர் உரிமையாளர்கள் முன்வந்துள்ளனர். இதுகுறித்து அபிராமி ராமநாதன் கூறியுள்ளதாவது, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் ஆன்-லைன் மூலமாகவே பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம், நேரடியாக டிக்கெட் பெற்றவர்கள் நேரடியாக பணத்தை திரும்ப பெறலாம். அடுத்து எப்போது படம் வெளியாகுமோ, அப்போதும் மீண்டும் புதிய டிக்கெட் வழங்கப்படும் என்றார்.

புதுச்சேரியிலும் தடை: தமிழகத்தில் வலியுறுத்தப்பட்ட அதேகோரிக்கையை வலியுறுத்தி புதுச்சேரியிலும் இரண்டு வார காலத்திற்கு விஸ்வரூபம் படம் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட கலெக்டர் தீபக்குமார் பிறப்பித்துள்ளார்.

தடையை எதிர்த்து வழக்கு ஒத்திவைப்பு : விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து கமல் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாணை இன்று மாலை வந்தது. அப்போது நீதிபதிகள் படத்தை 26-ம் தேதி பார்த்த பின்னரே முடிவு வெளியிடப்படும் என கூறி 28-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

கமல் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு : விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களை தவறாக சித்தரித்துள்ளதாக முஸ்லிம் அமைப்பு தெரிவித்து வருவதால், கமல் வீட்டை அந்த அமைப்‌பை சேர்ந்தவர்கள் யாரும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தக்கூடும் என்று கருதி அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.