தேடல்

காசு கொடுத்து கட்டிய "காப்பு'

க.பரமத்தி: பருவமழை பொய்ததன் காரணமாக, ஆவாரம் பூ, பூளைப்பூ, வேப்பிலை அடங்கிய கட்டினை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
தமிழர்களின் தலையாய திருவிழாக்களில், தை மாதம் முதல்நாள் வரும் பொங்கல் பண்டிகை மிக முக்கியமானது. மார்கழி கடைசிநாளில் வரும் போகிப்பண்டிகையும், தை முதல்நாள் திருவள்ளுவர் தினமும், 2ம் நாள் உழவர் தினம் என, மூன்று நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
போகிப்பண்டிகையையொட்டி, வீடுகள் அனைத்தும் வெள்ளையடிக்கப்பட்டு, காப்பு கட்டப்படுகின்றன. ஆவாரம்பூ, பூளைப்பூ, வேப்பிலையை ஒரு கட்டாக கட்டி, வீட்டு கூரையில் வைப்பது காப்பு எனப்படுகிறது. காப்புக்கு தேவையாக, ஆவாரம் பூ, பூளைப்பூ கிராமப்புறங்களில், பொட்டல் காடுகளில் இயற்கையாக முளைத்திருக்கும்.அவற்றை போகிக்கு முதல்நாள், பொதுமக்கள் பறித்து வைத்து, காப்பு கட்ட பயன்படுத்துவர். நடப்பாண்டு, பருவமழை பொய்த காரணத்தினால், ஆவாரம் பூ, பூளைப்பூ செடிகள் கருகி கிடக்கின்றன.
காசில்லாமல், இலவசமாக பூ பறித்து காப்பு கட்டும் பொதுமக்கள், ஆவாரம்பூ, பூளைப்பூ, வேப்பிலை கட்டினை, 10 ரூபாய் முதல், 15 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.