தேடல்

கோப்பை வென்றது வங்கதேசம்

மிர்புர்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற வங்கதேச அணி, ஒருநாள் தொடரை 3-2 என கைப்பற்றி கோப்பை வென்றது.வங்கதேசம் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 5 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 2-2 என, சமமாக இருந்தன. நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடந்தது. டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங் தேர்வு செய்தது. போலார்டு ஆறுதல்:வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கெய்ல் (2), பாவெல் (11), சாமுவேல்ஸ் (1) ஏமாற்றம் தந்தனர். டேரன் பிராவோ 51, போலார்டு 85 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் ஏமாற்ற, வெஸ்ட் இண்டீஸ் அணி 48 ஓவரில் 217 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.வங்கதேசம் வெற்றி:எளிய இலக்கை துரத்திய வங்கதேச அணியை தமிம் இக்பால் (8), இஸ்லாம் (10), அனாமுல் ஹக் (0) கைவிட்டனர். பின்வந்த கேப்டன் முஷ்பிகுர் (44), மகமதுல்லா (48), நாசிர் ஹுசைன் (34) கைகொடுக்க, வங்கதேச அணி 44 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 221 ரன்கள் எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதையடுத்து, ஒருநாள் தொடரை 3-2 என கைப்பற்றிய வங்கதேச அணி கோப்பை வென்றது.