தேடல்

குரு-சிஷ்யன் போட்டி! வெற்றி யாருக்கு?

பிப்ரவரி, 1ம் தேதி, தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு, ரொம்பவே ஸ்பெஷலான நாள். நீண்ட இடைவெளிக்கு பின், பிரபல இயக்குனர் மணிரத்னம், தமிழில் நேரடியாக இயக்கும், கடல் படம், அன்று தான், வெளியாகப் போகிறது. கவுதம் கார்த்திக், துளசி நாயர் போன்ற புதுமுகங்களுடன், அரவிந்த்சாமி, அர்ஜுன் போன்ற, அனுபவ நட்சத்திரங்களும் நடித்துள்ள படம் என்பதாலும், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள படம் என்பதாலும், ரசிகர்களிடையே, இந்த படத்துக்கு, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடலோர கிராமத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து, தயாராகியுள்ளது.

இதே நாளில், டேவிட் என்ற படமும் வெளியாகிறது. விக்ரம், ஜீவா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படமும், கடலோர பகுதிகளை மையமாக வைத்துத் தான், தயாராகியுள்ளது. தமிழில் மட்டுமல்லாது, இந்தியிலும் இந்த படம் வெளியாகிறது. டேவிட் படத்தை இயக்கும் பிஜேய் நம்பியார், இயக்குனர் மணிரத்னத்திடம், உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த படத்தின் தயாரிப்பாளர், மணிரத்னத்தின் உறவினரான, சாரதா திரிலோக். இப்படி, பல ஒற்றுமைகளுடன் உள்ள, இந்த இரண்டு படங்களும், ஒரே தேதியில் வெளியாவதால், இந்த படங்களின் வசூல் பாதிக்கப்படாதா என, கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது.

சினிமா என்பதும், சில நேரங்களில் சூதாட்டம் போன்றது தான். நல்ல கதை, இனிமையான பாடல், சிறப்பான நடிப்பு, நவீன தொழில் நுட்பங்கள் என, பல விஷயங்கள், திரைப்படங்களின் வெற்றிக்கு, அடையாளமாக திகழ்ந்தாலும், நேரமும் நன்றாக இருக்க வேண்டும் என்கின்றன, கோலிவுட் வட்டாரங்கள். பிப்ரவரி, 1ம் தேதி, குரு - சிஷ்யனுக்கு இடையே நடக்கும் போட்டியில், வெற்றி பெறப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.