தேடல்

காற்றாலை மின் உற்பத்தி 10 சதவிகிதத்துக்கு கீழ் சென்றது

சென்னை:கடந்த சில நாட்களாக, கைகொடுத்து வந்த காற்றாலைகள், கடந்த இரு தினங்களாக மின் உற்பத்தியை இழந்துவிட்டன. மொத்த காற்றாலை உற்பத்தியில், 10 சதவிகித்துக்கும் குறைவாகவே, மின் உற்பத்தி கிடைத்துள்ளது.

தமிழகத்தில், 4,000 மெகாவாட் மின் பற்றாக்குறை உள்ளது. இதனால்,பல மாவட்டங்களில், 14மணி நேரத்திற்கு மேலாக, மின் தடை உள்ளது. பருவ மழையின்மை உள்ளிட்ட பல காரணங்களால், கடந்த மாதம் இறுதி வரை, 7,000 முதல் 8,000மெகாவாட் மட்டுமே, மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக, படிப்படியாக, 9,000 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு, மின் உற்பத்தி அதிகரித்தது. தென் மாவட்டங்களில், ஓரளவு காற்று வீசியதால், காற்றாலை மின் உற்பத்தியும், 1,176 மெகாவாட் அளவிற்கு உயர்ந்தது.

காற்று குறைந்ததால், காற்றாலைகளால் கிடைத்து வந்த மின்சாரம், நேற்று, 400 மெகாவாட்டாக குறைந்தது. இதனால், நேற்று காலை நிலவரப்படி, மொத்த மின் உற்பத்தி, 8,808 மெகாவாட்டாக, குறைந்தது. தற்போது, குளிர் காலம் என்பதால், இரவு நேரங்களில், மின் தேவையின் அளவும் குறையும். இதனால், மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள குறைவு, பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என, மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.