தேடல்

கொள்ளிடக்கரை ஆட்டம் காணும் ஆபத்து : மணல் லாரிகளை மறித்து மக்கள் ஆவேசம்

மண்ணச்சநல்லூர்:மணல் குவாரிக்கு செல்லும் நூற்றுக்கணக்கான லாரிகளால், கொள்ளிடக்கரை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனக் கூறி, 300க்கும் மேற்பட்ட மணல் லாரிகளை, கிராம மக்கள் சிறை பிடித்தனர். திருச்சி, சமயபுரம் கொள்ளிடம் டோல்கேட் அருகே, கல்லணை செல்லும் பாதையில், உத்தமர்சீலி, கிளிக்கூடு பகுதிகளில், மணல் குவாரிகள் இயங்கி வந்தன. இந்த மணல் குவாரிகளில், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூட்டைச் சேர்ந்த லாரிகள், வரிசையில் நிற்காமல், நேராக சென்று, தினமும், ஒரு லோடு மணல் பெற சலுகை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஐந்தாண்டுக்கு மேல் செயல்பட்ட, உத்தமர்சீலி மணல் குவாரியும், அதைத்தொடர்ந்து, கிளிக்கூடு மணல் குவாரியும் மூடப்பட்டது. பனையபுரம் அல்லது அதையொட்டிய பகுதியில், அரசு மணல் குவாரியை திறக்கும். உள்ளூர்காரர்களுக்கு, தினமும் ஒரு லோடு மணல் கிடைக்கும் என, அப்பகுதியினர் நினைத்திருந்தனர்.
ஆனால், லால்குடியை அடுத்த, பச்சாம்பேட்டை பஞ்சாயத்தில் உள்ள இடையாற்று மங்கலம் பகுதியில், அரசு மணல் குவாரியை திறந்தது. இதனால், உத்தமர்சீலி, கிளிக்கூடு பகுதி லாரி உரிமையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இடையாற்றுமங்கலம் மணல் குவாரிக்கு, உத்தமர்சீலி, கிளிக்கூடு வழியாக, மணல் லாரிகள் சென்று வந்ததால், எங்கள் லாரிகளுக்கு தினமும், ஒரு லோடு மணல் தர வேண்டும் என, அப்பகுதி லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
பொதுப்பணித் துறை அதிகாரிகள் அதை ஏற்க மறுத்ததால், உத்தமர்சீலியைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் ஆத்திரமடைந்தனர். மேலும், கொள்ளிடக்கரை மீது, தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் செல்வதால், ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் அபாயம் இருந்தது.
இதனால் மாட்டு வண்டி செல்லவே, அப்பகுதி மக்கள் தடை விதித்திருந்தனர். அதையும் மீறி, லாரிகள் சென்று வந்தன. இரு வேறு கோரிக்கையும் வலியுறுத்தி, நேற்று காலை, லாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள், சாலையில் குறுக்கே மரக்கட்டைகள், பழைய லாரி டயர்களை போட்டு, மணல் லாரிகள் செல்ல விடாமல் தடுத்தனர்.
இதனால், 300க்கும் மேற்பட்ட லாரிகள், மணல் அள்ள செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்றன. தகவலறிந்த, லால்குடி டி.எஸ்.பி.,உட்பட அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தினர்.
உள்ளூர் லாரிகளுக்கு மணல் தருவது குறித்து முடிவெடுக்கப்படும்; கொள்ளிடக் கரையில் மணல் லாரிகள் செல்வதை தடை செய்வது குறித்து, 10 நாட்களுக்குள் முடிவு அறிவிக்கப்படுவதாக, அவர்கள் உறுதி அளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.