தேடல்

கிழக்கு கடற்பகுதியை பாதுகாக்க திட்டம் வருகின்றன வேவு, போர் விமானங்கள்

சென்னை: தமிழக, புதுவை மண்டல கடற்படையை பலப்படுத்தும் வகையில், புதிய வேவு மற்றும் போர் விமானங்கள், கப்பல்கள் வாங்கப்படுகின்றன, என, கடற்படை கமாண்டர், அமர் கே. மகாதேவன் கூறினார்.

இந்திய கடற்படை தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழகம் மற்றும் புதுவை கடற்படை தலைமை அலுவலகமான சென்னை ஐ.என்.எஸ்., கமாண்டர் மகாதேவன்கூறியதாவது:நாட்டின் வளத்தை மேம்படுத்த, கடற்படையை வலுப்படுத்துதல் என்பதை, இந்த ஆண்டின் கடற்படை கொள்கையாகக் கொண்டுள்ளோம். விசாகபட்டினத்தைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள, கிழக்கு கடற்படை வலுப்படுத்தப்படுகிறது.

வேவு விமானங்கள் : இதன் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழகம் மற்றும் புதுவை மாநில கடற்பகுதியை பாதுகாக்கும், கடற்படைக்கு நீண்ட தொலைவில் உள்ள நடமாட்டங்களையும் வேவு பார்க்கும் விமானங்கள், மிக் 29கே ரக போர் விமானங்கள், பயிற்சி விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல் தாக்குதலை முறியடிக்கும் கப்பல்கள் வாங்கப்படுகின்றன.
விமானங்கள் அரக்கோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்.கடல் எல்லையில் ஊடுருவல்களைத் தடுத்தல், கடல் வளம் மற்றும் கடல் வழிகள் மூலம், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் போன்றவைக்கு முக்கியத்துவம் அளித்து, பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கிறோம். நீண்ட கடலோரத்தை பாதுகாக்க ,கடலோர காவல்படை மற்றும் மாநில போலீசார் ஆகியோருடன் இணைந்து செயல்படுகிறோம். கடந்த சில மாதங்களின் கிழக்கு கடலோரப் பகுதியில், எவ்வித அத்துமீறல்களும் நடக்கவில்லை.

இலங்கைக்கு அறிவுறுத்தல் : சர்வதேச கடல் பகுதியில், தமிழக மீனவர்கள் தாக்குப்படுவதைத் தடுக்க, தொடர் அறிவுறுத்தல்களை, இலங்கை கடற்படைக்கு செய்து வருகிறோம். மீனவர்கள், இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்க வேண்டும். இலங்கை கடற்பகுதிக்குள் செல்லக்கூடாது என, தமிழக மீனவர்களையும் எச்சரிக்கை செய்கிறோம்.
நாகை மீனவர்கள், 37 பேர் டிச., 1ம் தேதியன்று, இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்ததால், அந்நாட்டு கடற்படையால் பிடிக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் மீது தாக்குதல் எதுவும் நடக்கவில்லை. அவர்களை மீட்க, இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடத்தல்கள் மற்றும் ஊடுருவல்கள் கிழக்கு கடற்பகுதியில் நிகழா வண்ணம், கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இடமாற்றம் : தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களின் தலைமையிடமாக சென்னையில் உள்ள ஐ.என்.எஸ்., அடையாறு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்கான, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதிய இடம் எது என்பதை, கடற்படை தலைமையகம் தான் முடிவு செய்து அறிவிக்கும். இவ்வாறு, கமாண்டர் மகாதேவன் கூறினார்.