தேடல்

கைவினைப்பொருட்கள் ஏற்றுமதி இலக்கை எட்டும்

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி, இலக்கு அளவான, 330 கோடி டாலரை (18,150 கோடி ரூபாய்) எட்டும் என, கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இ.பி.சி.எச்.,) தெரிவித்துள்ளது.ஆப்ரிக்கா அமெரிக்கா மட்டுமின்றி, சீனா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளிலும், இந்திய கைவினைப் பொருட்களுக்கான தேவை சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. இதை எடுத்துக்காட்டும் விதமாக, கடந்த 10 மாதங்களில், இதன் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது.


தற்போதைய நிலையில், கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி, 270 கோடி டாலரை (14,850 கோடி ரூபாய்) எட்டியுள்ளது என, இ.பி.சி.எச்., அமைப்பின் தலைவர் அர்விந்த் வதேரா தெரிவித்தார்.நாட்டின் மொத்த கைவினைப் பொருட்கள் ஏற்றுமதியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு, 60 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இருப்பினும், ஐரோப்பிய நாடுகளுக்கான, இதன் ஏற்றுமதி முழு அளவில் சூடுபிடிக்க வில்லை. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், இந்திய கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி, 22 சதவீதம் வளர்ச்சி கண்டு, 230 கோடி டாலரை எட்டியுள்ளது.


ஜவுளி ரகங்கள்:மொத்த கைவினைப் பொருட்கள் ஏற்றுமதியில், மரச்சாமான்கள், 72 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது தவிர, கவரிங் நகைகள் (61 சதவீதம்), சால்வைகள் (53 சதவீதம்), கை வேலைப்பாடு ஜவுளி ரகங்கள் (14 சதவீதம்) ஆகியவையும் குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளன.