தேடல்

காவிரி நீருக்காக தமிழகம் பந்தாடப்படும் அவலம்

புதுடில்லி: கருகும் பயிர்களை காப்பாற்ற காவிரி நீருக்காக, தமிழகம் சுப்ரீம் கோர்ட், காவிரி கண்காணிப்புக்குழு மற்றும் காவிரி நதிநீர் ஆணையம் என பந்தாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு மட்டுமல்லாமல், இப்பிரச்னையில் தமிழக அரசுக்கும் மிகவும் சோதனையான ஆண்டு என்றே கூறலாம். அந்த அளவிற்கு காவிரி பிரச்னையில் தமிழகமும், தமிழக அரசும் பந்தாடப்பட்டுள்ளன. வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரைகுறுவை மற்றும் சம்பா பயிர்களுக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப்போனதால், தமிழகத்தில் குறுவை சாகுபடி அடியோடு பாதிக்கப்பட்டது. இந்நிலையில், சம்பா பயிரையாவது, பிழைக்க வைக்கும் முயற்சியில் தமிழக அரசு தீவிரம் காட்டியது. இதையடுத்து, சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி, பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையக்கூட்டம் நடந்தது. இதில் தமிழகத்திற்கு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட பிரதமர் உத்தரவிட்டார். ஆனால் பிரதமரின் உத்தரவை நிராகரித்த கர்நாடக முதல்வர் ஷெட்டர், கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். இதையடுத்து காவிரி நீரில், தமிழகத்திற்கு உரிய பங்கை, இடர்பாட்டு பங்கீட்டுக் கொள்கையின்படி, தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்து விட கோரி, தமிழக அரசின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், தமிழகம் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து கர்நாடகாவிற்கு எச்சரிக்கை விடுத்த சுப்ரீம் கோர்ட் தண்ணீர் திறந்து விடும்படி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சில நாட்கள் காவிரியில் தண்ணீரை கர்நாடகா திறந்து விட்டது.

பின்னர் திடீரென தண்ணீரை நிறுத்திய கர்நாடகா, வழக்கு விசாரணையின் போது, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதால் கர்நாடகத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதாகவும், தங்களால் தொடர்ந்து தண்ணீர் திறக்க இயலாது என்றும் தெரிவித்தது. பின்னர் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இரு மாநில முதல்வர்கள் நேரில் சந்தித்து பேசி இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர். இதன்படி, கடந்த நவம்பர் 29 ம்தேதி பெங்களூரு சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் ஷெட்டரை சந்தித்து பேசினார். ஆனால் அப்போதும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகம் மறுத்து விட்டது. இதையடுத்து மீண்டும் சுப்ரீம் கோர்ட்டின் கதவை தட்டியது தமிழகம். இதையடுத்து காவிரி கண்காணிப்புக்குழுவை கூட்டி தமிழகம் மற்றும் கர்நாடகத்திற்கு தேவையான நீரின் அளவை முடிவு செய்ய வேண்டும் என்றும், அதுவரை 10 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த டிசம்பர் 7ம் தேதி கூடிய காவிரி கண்காணிப்புக்குழு டிசம்பர் மாத இறுதிக்குள் 12 டி.எம்.சி., தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.

பின்னர் மீண்டும் காவிரியில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறக்க வலியுறுத்தி தமிழகம் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தது. இதையடுத்து மீண்டும் காவிரி கண்காணிப்புக்குழு கூட்டத்தைக் கூட்ட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மீண்டும் கடந்த 10ம் தேதி கூடிய காவிரி கண்காணிப்புக்குழுவில் வழக்கம் போல் தண்ணீரை திறந்து விட முடியாது என கர்நாடகம் கூறி, மீண்டும் சுப்ரீம் கோர்ட்டிடம் சென்றது தமிழக அரசு.

இம்மனு விசாரணைக்கு வந்த போது, தங்களிடம் குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதாகவும், தமிழகம் கோரும் 12 டி.எம்.சி., தண்ணீரைத்தர இயலாது என்றும் கர்நாடகா தெரிவித்தது. இதையடுத்து கடந்த 20 ஆண்டுகளில் கர்நாடகா தனது குடிநீர் பயன்பாட்டிற்கு எடுத்த நீரின் அளவு குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து இன்று கர்நாடகா அந்த அறிக்கையை தாக்கல் செய்தது. இதையடுத்து பேசிய நீதிபதிகள், கர்நாடகா தனது குடிநீர் தேவைக்கு மட்டுமே நீர் இருப்பதாக கூறுவதால், காவிரியில் தமிழகம் கோரியபடி 12 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட உத்தரவிட முடியாது என தெரிவித்து விட்டனர். மேலும் நீரைப் பெற காவிரி நதிநீர் ஆணையத்திடம் முறையிடும்படி கூறி, வழக்கு விசாரணையை வரும் 4 ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

பந்தாடப்படும் தமிழகம்: தொடர்ந்து காவிரி நீருக்காக தமிழகம் சுப்ரீம் கோர்ட், காவிரி கண்காணிப்புக்குழு, காவரி நதிநீர் ஆணையம் என பந்தாடப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் துவங்கிய தண்ணீருக்கான தமிழகத்தின் இந்தாண்டு பயணம் இன்னும் முடிவடையவில்லை. இதற்கிடையே காவிரியில் தண்ணீரை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகளின் கண்ணீரும் தற்போது வற்றி விட்டது.