தேடல்

காவிரியில் தண்ணீர் திறக்கும்படி உத்தரவிட முடியாது: சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி:காவிரியில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும்படி, கர்நாடகா அரசுக்கு, இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என, தெரிவித்த சுப்ரீம் கோர்ட், வழக்கின் விசாரணையை, அடுத்த மாதம், 4ம், தேதிக்கு ஒத்திவைத்தது.

தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில், தண்ணீரின்றி கருகும், சம்பா பயிர்களை காக்க, 12 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விடும்படி, கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என, தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு, நீதிபதிகள், ஆர்.எம்.லோதா, ஜெ.செலமேஸ்வர் ஆகியோர் அடங்கிய, பெஞ்ச் முன், நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தவு:கடந்த, 1992லிருந்து, 2012 வரை, குடிநீருக்காக பயன்படுத்திய, காவிரி தண்ணீரின் அளவு குறித்த விபரங்களை, கோர்ட்டில், கர்நாடக அரசு தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன் தமிழகத்துடன் பகிர்ந்து கொண்ட, காவிரி தண்ணீர் குறித்த விபரங்களை தர வேண்டும்.பழமையான அணுகுமுறை மற்றும் நடைமுறைகளுக்கு பதிலாக, இரு மாநிலங்களின் தேவையை, சமமாக பூர்த்தி செய்யும் வகையில், ஒரு புதிய முறையை உருவாக்குவது பற்றி சிந்திக்க வேண்டும். தண்ணீரை சரிசமமாக பகிர்ந்து கொள்ள, ஒரு இடைக்கால தீர்வு காண வேண்டியது அவசியம்.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கர்நாடகா தரப்பில் ஆஜரான வக்கீல், வாதிட்டதாவது:தற்போதுள்ள சூழ்நிலையில், காவிரி கண்காணிப்பு குழு பிறப்பித்த, தலையிடக் கூடாது. இடைக்காலமாக என்ன நிவாரணம் பெற விரும்பினாலும், பிரதமர் தலைமையிலான, காவிரி நதி நீர் ஆணையத்தில் தான், முறையிட வேண்டும். தற்போது, கர்நாடகாவின் குடிநீர் தேவைக்கே, தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. தமிழகத்துக்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது.இவ்வாறு, கர்நாடகா வக்கீல் வாதிட்டார்.

தமிழக அரசு சார்பான வக்கீல்,காவிரி டெல்டா பகுதியில், கருகும் பயிர்களின் ஒரு பகுதியையாவது காப்பற்ற வேண்டும். எனவே, உடனடியாக, காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி, கர்நாடகா அரசுக்கு, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என்றார்.

இதன்பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:காவிரி நீரை பகிர்ந்து கொள்வதில், இரு மாநிலங்களும், தங்களின் வேறுபாடுகளை ஒதுக்கி விட்டு, சுமுக தீர்வு காண, தவறி விட்டன. எனவே, தமிழகத்துக்கு, தண்ணீர் திறந்து விடும்படி, கர்நாடகா அரசுக்கு, இடைக்கால உத்தரவு எதையும், தற்போது பிறப்பிக்க முடியாது. இந்த வழக்கின் விசாரணை, அடுத்த மாதம், 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.