தேடல்

காவிரி தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் தடுக்க என்ன செய்யலாம்? கர்நாடகாவில் அனைத்து கட்சிக்கூட்டம்

பெங்களூரு: காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விவாதிக்க கர்நாடக அனைத்து கட்சிக்கூட்டம் இன்று நடக்கிறது.

காவிரி நீரை பகிர்ந்து கொள்வதில், தமிழகம் - கர்நாடகா இடையே, நெடுங்காலமாக பிரச்னை உள்ளது. இதற்கு தீர்வு காண, 1990ல், காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம், பல்வேறு ஆய்வுகளை நடத்தியும், பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்தும், 2007, பிப்ரவரியில், இறுதித் தீர்ப்பை வெளியிட்டது. இதன்படி, காவிரி நீரில், 419 டி.எம்.சி., தண்ணீரை தமிழகமும், 270 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகாவும், கேரள அரசு, 30 டி.எம்.சி., தண்ணீரையும், புதுச்சேரி அரசு, 7 டி.எம்.சி,, தண்ணீரையும், பகிர்ந்து கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, 10 டி.எம்.சி., தண்ணீரை, இருப்பு வைக்க வேண்டும் என, தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கமாக, நடுவர் மன்றத்தின் தீர்ப்பு, மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்ட, 90 நாட்களுக்குள் அமலுக்கு வரும். ஆனால், கடந்த, ஐந்து ஆண்டுகளாக, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை, மத்திய அரசு, அரசிதழில் வெளியிடவில்லை. இதையடுத்து, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிடும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு மனு செய்தது. இந்த வழக்கின், முந்தைய விசாரணையின் போது, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, ஜனவரி மாத இறுதிக்குள், அரசிதழில் வெளியிடப்படும் என, மத்திய அரசு தரப்பில், கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான நடவடிக்கை எதையும், மத்திய அரசு எடுக்கவில்லை. இந்நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்த மனு, நீதிபதி, லோதா தலைமையிலான பெஞ்ச் முன், கடந்த 4ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நடுவர்மன்றத்தின் தீர்ப்பை, அரசிதழில் வெளியிடாதது குறித்து, மத்திய அரசுக்கு, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். உடன், இது தொடர்பாக நடவடிக்கையை எடுக்க, கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, எங்களுக்கு போதிய அவகாசம் அளிக்க வேண்டும் என, மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை வரும் பிப்ரவரி 20ம் தேதிக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த அறிவிப்பு, கர்நாடக சட்டசபையில் எதிரொலித்தது. இது தொடர்பாக, நேற்று சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் சித்தராமையா, காவிரி தீர்ப்பை அரசிதழில் வெளியிட கர்நாடக அரசு ஒப்புக்கொண்டது ஏன் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, இது குறித்து நாளை (இன்று) சட்டசபையில் விரிவான விளக்கம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், காவிரி தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசிக்க, கர்நாடக அனைத்துக்கட்சிக்கூட்டம் இன்று பெங்களூருவில் நடக்கிறது. இக்கூட்டத்திற்கு கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமை வகிக்கிறார்.