தேடல்

கோஹ்லி, ரெய்னா பின்னடைவு

துபாய்:சர்வதேச டுவென்டி-20 போட்டி, பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா பின்னடைவை சந்தித்தனர்.சர்வதேச டுவென்டி-20 போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி, 5வது இடத்தில் இருந்து 6வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா, ஒரு இடம் பின்தங்கி, 9வது இடம் பிடித்தார். இவர், 9வது இடத்தை இங்கிலாந்து வீரர் இயான் மார்கனுடன் பகிர்ந்து கொண்டார்.மற்ற இந்திய வீரர்களான யுவராஜ் சிங் (13வது இடம்), காம்பிர் (17வது இடம்) ஆகியோர் டாப்-20 வரிசையில் உள்ளனர். இந்திய கேப்டன் தோனி, 23வது இடத்தை பிடித்தார்.முதல் மூன்று இடங்களில், பிரண்டன் மெக்கலம் (நியூசிலாந்து), கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்), மகிளா ஜெயவர்தனா (இலங்கை) ஆகியோர் உள்ளனர்.அஷ்வின் ஆறுதல்:பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்தியா சார்பில் அஷ்வின் 16வது இடத்தில் உள்ளார். ஹர்பஜன் சிங் 30வது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடங்களை சயீத் அஜ்மல் (பாகிஸ்தான்), அஜந்தா மெண்டிஸ் (இலங்கை), சுவான் (இங்கிலாந்து) பிடித்தனர்.ஆல்-ரவுண்டர்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் யுவராஜ் சிங் 3வது இடத்தில் உள்ளார். முதலிரண்டு இடங்களில் ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன், பாகிஸ்தானின் முகமது ஹபீஸ் நீடிக்கின்றனர்.இந்தியா நம்பர்-3:அணிகளுக்கான ரேங்கிங்கில், இந்தியா 119 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டுவென்டி-20 தொடரை 2-0 எனக் கைப்பற்றிய இலங்கை அணி, 131 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. இரண்டாவது இடத்தில் 122 புள்ளிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் உள்ளது.