தேடல்

தங்க சட்டை அணிந்து பளபளக்க வைத்த பவார் கட்சி பிரமுகர்

புனே: மகாராஷ்டிராவில் சரத்பவார் கட்சி பிரமுகர் ஒருவர் ரூ. 1.25 கோடி மதிப்பிலான தங்கத்தால் சட்டை அணிந்து வந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். வரப்போகும் லோக்சபா தேர்தலில் டிக்கெட் கேட்டு போட்டியிட விரும்புவதாகவும் தெரிவித்தார்.மாகராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தைச்சேர்ந்தவர் தட்டா பஹே (32).
இவர் சரத்பவாரின் தேசியவாத காங். கட்சியைச்சேர்ந்த உள்ளூர் பிரமுகர். இவர் நேற்று புனே கட்சி அலுவலகம் வந்தார். அப்போது பத்து விரல்களிலும் தங்க மோதிரம், மாலையை கழுத்தில் அணிந்தாற் போன்று தங்கத்தால் செயின்கள், தங்கத்தால் ஆன பிரெஸ்லெட் ஆகியவற்றுடன் முற்றிலும் தங்கத்தினால் செய்யப்பட்ட மேல்சட்டையுடன் வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இவர் அணிந்து வந்த சட்டையின் ‌எடை 3.5 கிலோ. அதன் மதிப்பு ரூ.1.25 கோடி எனவும், கழுத்தில் அணிந்துள்ள தங்க நகைகள், உள்ளிட்டவை மொத்தமாக ரூ.7 கோடி என கூறப்படுகிறது. இவ்வாறு அவர் வந்ததை கேள்விப்பட்ட மராத்தி மற்றும் லோக்கல் டி.வி. ஊடகத்தினர் அவரை மொய்த்துவிட்டனர். அவரை பல கோணங்களில் வீடியோ எடுத்து தள்ளினர். இது குறித்து அவர் கூறுகையில், நாடு முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்து பிரபலமாகவே இப்படியொரு வித்தியாசமான காஸ்டியூமில் வந்தேன். மேலும் வரப்போகும் 2014-ம் லோக்சபா தேர்தலில் சீட் வாங்கி போட்டியிட வேண்டும் என்பதே ‌எனது ஆசை என்றார் கூலாக. இது குறித்து சில டி.வி.சானல்கள், மாநிலத்தில் கடும் வறட்சி, வறுமை, பட்டினி,விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில் இது போன்ற செயல்பாடுகள் மக்களை வெறுப்படைய செய்வதாக செய்தி வெளியிட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்