தேடல்

சந்தானம் நியாயம் சொல்லாவிட்டால் தற்கொலை செய்வேன்! உதவி இயக்குனர்

எனது கதையை திருடி படமாக்கிவிட்டார் சந்தானம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன், எனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்வேன் என உதவி இயக்குனர் ஒருவர் வேதனையுடன் கூறியுள்ளார். நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் படம் கண்ணா லட்டு திண்ண ஆசையா. இப்படத்தை மணிகண்டன் என்பவர் இயக்குகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் நவீன் சுந்தர் என்பவர் புகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, நான் டைரக்டர்கள் மகேந்திரன், ராபர்ட் ராஜசேகரன், ஸ்டான்லி, ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளேன். சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகிவிட்டது. இரண்டு ஆண்டுக்கு முன்னர் அன்புள்ள சிம்பு என்ற பெயரில் ஒரு கதையை ரெடி பண்ணி அதில் சந்தானத்தை ஹீரோவாகவும், சிம்புவை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்கவும் எண்ணியிருந்தேன். அதை டைரக்டர் ஸ்ரீநாத்திடம் சொன்னேன். அவர் சந்தானத்திடம் என்னை அனுப்பி வைத்தார். சந்தானத்திடமும் கதை சொன்னேன். அவருக்கு பிடித்து போய் சிம்புவிடம் கால்ஷீட் வாங்கிய பிறகு படத்தை ஆரம்பிக்கலாம் என்றார். ஆனால் இப்போது எனது கதையிலேயே கண்ணா லட்டு திண்ண ஆசையா என்ற பெயரில் படத்தை எடுத்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

எனது கதையை திருடி படமாக்கிவிட்டார் சந்தானம். இதுதொடர்பாக சாந்தானத்தை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் என்னை தவிர்க்கிறார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். சந்தானம் எனக்கு உரிய நியாயம் சொல்லாவிட்டால், அவருக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பேன். அப்படியும் அவர் செவி சாய்க்கவில்லை என்றால் இறுதியாக தற்கொலை செய்து கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.