தேடல்

சீசன் எதிரொலி; சபரிமலையில் பெரிய அளவில் சுகாதாரப்பணிகள்

திருவனந்தபுரம்: சபரிமலை சீசன் துவங்கவுள்ளதையடுத்து, அங்கு மிகப்பெரிய அளவிலான சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

இந்தாண்டிற்கான சபரிமலை சீசன் வரும் நவம்பர் 15ம் தேதி முதல் துவங்குகிறது. இதையடுத்து, சபரிமலையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி விவரித்தார். அவர் கூறுகையில், “சபரிமலை சீசன் துவங்குவதையடுத்து அங்கு மிகப்பெரிய அளவிலான சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சபரிமலையில் நிறைந்திருந்த கழிவுப்பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. அதிகமான சுகாதாரப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பக்தர்கள் நடந்து செல்ல ஏதுவாக நடைபாதைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.

“அமைச்சர்கள் சிவகுமார் மற்றும் இப்ராகிம் குன்ச் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் பேர் சபரிமலையில் சுகாதாரப்பணிகளை மேற்கொண்டுள்ளனர். பம்பா, சன்னிதானம் மற்றும் நிலக்கல் ஆகிய பகுதிகளில் கழிவுப்பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. பம்பாவிலிருந்து மரக்கூட்டம் பகுதி வரை நடைபாதை மேம்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் வந்து செல்லும் வகையில், மலைப்பாதை மிகப்பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகள் வரும் நவம்பர் 10ம் தேதி முடிவு பெறும். அதே போல் இரண்டு கியூ காம்ப்ளக்ஸ் கட்டும் பணியும் நிறைவு பெற்றுள்ளது. சபரிமலையில் தயார் செய்யப்படும் அரவணை, அப்பம் பிரசாதம் ஆகியவற்றின் தரத்தை உறுதி செய்யும் வகையில், தரநிர்ணயக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது”என்றும் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.