தேடல்

சு.சாமியின் கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரிப்பு

புதுடில்லி:நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிட்ட நிறுவனத்திற்கு, காங்கிரஸ் கட்சி,90 கோடி ரூபாய் கடனாக வழங்கியதால், அந்தக் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி, ஜனதா கட்சித் தலைவர், சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த மனுவை, தேர்தல் ஆணையம் நேற்று தள்ளுபடி செய்தது.
அவர் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் நிராகரித்தது.

நாட்டின் முதல் பிரதமராக இருந்த, மறைந்த ஜவஹர்லால் நேருவால், 1937ம் ஆண்டில் துவக்கப்பட்ட நிறுவனம், அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்! இந்த நிறுவனம், நேஷனல் ஹெரால்டு என்ற ஆங்கில பத்திரிகையையும், குவாமி அவாஸ் என்ற, இந்தி பத்திரிகையையும் வெளியிட்டது. தற்போது, நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளி வரவில்லை. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிட்ட, அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்டிற்கு, காங்கிரஸ் கட்சி, 90 கோடி ரூபாயை, வட்டி இல்லா கடனாக வழங்கியதாக, ஜனதா கட்சி தலைவர், சுப்பிரமணிய சாமி, சமீபத்தில், புகார் தெரிவித்தார்.

அதனால், தேர்தல் சட்ட விதிகள் மற்றும் வருமான வரி சட்ட விதிகளை மீறிய, காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி,
கடந்த சனிக்கிழமை அன்று, தேர்தல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்தார். சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த மனு

குறித்து, தலைமை தேர்தல் ஆணையர், வி.எஸ்.சம்பத் தலைமையில், நேற்று நடந்த

தேர்தல் ஆணையத்தின் முழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதன் பின்,

காங்கிரசின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரிய, சாமியின் மனுவை,தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது.

இது தொடர்பாக, சாமிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: உங்கள் புகார், ஒரு அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரும் விதிமுறைகளின் கீழ் வரவில்லை. இம்மாதம், 3ம் தேதி மற்றும், 5ம் தேதி, நீங்கள் சமர்ப்பித்த புகார் மனு, தேர்தல் சின்னங்கள் விதிகள், 1968, பிரிவு, 16ஏ-ன் கீழ் விசாரணைக்கு உகந்தது அல்ல.

இந்தச் சட்ட விதிகள் தான், தேர்தல் நன்னடத்தை விதிகளை கடைபிடிக்காத அல்லது தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை நிறைவேற்றாத, அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய, தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கின்றன.மக்கள் பிரதிநிதித்துவம் சட்டம், 1951-ல், எந்தெந்த வழிகளில் எல்லாம், அரசியல் கட்சிகள் நிதி திரட்டலாம் என்று மட்டுமே
தெரிவிக்கப்பட்டுள்ளது; அப்படி திரட்டப்பட்ட நிதியை குறிப்பிட்ட பயன்பாடுகளுக்குமட்டுமே செலவழிக்க வேண்டும் என, எங்கும் தெரிவிக்கப்படவில்லை.
வருமான வரி சட்டம், 1961ல், உள்ள விதிகளுக்கு மாறாக, காங்கிரஸ் கட்சிசெயல்பட்டிருந்தால், அது தேர்தல் ஆணையத்தின் விசாரணை வரம்பிற்கு அப்பாற்ப்பட்டது.மேலும், தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக, நீங்கள் புகார் தெரிவித்துள்ளீர்கள்; அது, முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது. பத்திரிகைகளில் வந்த செய்திகள் அடிப்படையில், நீங்கள் நடவடிக்கை எடுக்கும்படி, கோரியதையும் நாங்கள் அங்கீகரிக்க முடியாது.இவ்வாறு, சாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.