தேடல்

சென்னையில் ஐ.பி.எல்., ஏலம்

புதுடில்லி:ஆறாவது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலம், பிப்., 3ம் தேதி சென்னையில் நடக்கவுள்ளது.இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் ஆண்டு தோறும் உள்ளூர் அணிகள் பங்கேற்கும் டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான 6வது ஐ.பி.எல்., தொடர், ஏப். 3ம் தேதி முதல் மே 26ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் உள்ளிட்ட 9 அணிகள் பங்கேற்கின்றன.இத்தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஏப். 3ம் தேதி கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கோல்கட்டா நைட்ரைடர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. பைனல், மே 26ம் தேதி கோல்கட்டாவில் நடக்கவுள்ளது.இத்தொடருக்கான வீரர்கள் ஏலம், அடுத்த மாதம் 3ம் தேதி சென்னையில் நடக்கவுள்ளது. இதில், 37 வீரர்களின் பெயர்கள் ஏலத்தில் பரிந்துரை செய்யப்படலாம் எனத் தெரிகிறது.இதுகுறித்து ஐ.பி.எல்., தொடரின் உயர் அதிகாரி சுந்தர் ராமன், டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், ஆறாவது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலம், பிப்., 3ம் தேதி சென்னையில் காலை 11 மணிக்கு துவங்கும், என, குறிப்பிட்டுள்ளார்.