தேடல்

சினிமா தாதாக்களை பார்த்து ஏமாறும் ஹீரோ

நயன்தாரா மாதிரி வரவேண்டும் என்பதற்காகவே சானியா என்ற தன் பெயருக்கு பின்னால் தாராவை சேர்த்துக் கொண்டுள்ள சானியாதார தீவிரமாக பட வேட்டையில் இறங்கி உள்ளார். நலந்தானா என்ற படத்தில் முதலில் நடித்தார். படம் ஒரு நாள் கூட தியேட்டரில் ஓடவில்லை. அதனால் யாரும் சானியாவிடம் நலந்தானா என்று கேட்கவில்லை. தற்போது சிறுவர் பூங்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுவேற இதுவேற என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். எம்.தியாகராஜன் இயக்கும் இந்தப் படத்தில் சானியாவுக்கு ஹீரோ வர்ஷன். நண்பர்கள் கவனத்திற்கு படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர். காமெடி நடிகர் ஜெயமணியின் மகன்.

சினிமாவில் வடசென்னை தாதாக்களை பார்த்து வியந்து போகும் ஹீரோ அதுமாதிரியே தானும் ஆகவேண்டும் என்பதற்காக கிராமத்திலிருந்து சென்னை வருவாராம். ஆனால் இங்குள்ள தாதாக்கள் சினிமாவில் வருவது மாதிரி இல்லாமல் வேற மாதிரி இருப்பார்களாம் என்பதை நகைச்சுவையாக சொல்கிற கதையாம். கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, தியாகு, சிங்கமுத்து என காமெடி டீமும் களம் இறங்குகிறது.