தேடல்

செயல்பாட்டு செலவினங்கள் அதிகரிப்பால் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி சரிவடையும்

கொச்சி:நாட்டின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டில், சரிவைக் காணும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. சர்வதேச பொருளாதார மந்தநிலையால், இத்தொழிலில் ஈடுபட்டு வரும் ஏற்றுமதியாளர்கள், ஏற்கனவே, பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.


டீசல் விலை உயர்வு:இந்நிலையில், டீசல் விலை உயர்வு மற்றும் வாடகை கட்டண அதிகரிப்பு போன்றவை, ஏற்றுமதி நிறுவனங்களின் செயல்பாட்டு செலவினத்தை அதிகப்படுத்திஉள்ளது.எனவே, இது போன்ற இடர்ப்பாடுகளால், நடப்பாண்டில், கடல் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி குறையும் என, கணக்கிடப்பட்டுள்ளது.இதற்கு எடுத்துக்காட்டாக, சென்ற டிசம்பர் வரையிலான காலத்தில், டாலர் மதிப்பின் அடிப்படையிலான, நாட்டின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, 11 சதவீதம் அளவிற்கும், அளவின் அடிப்படையிலான இதன் ஏற்றுமதி, 5 சதவீதம் அளவிற்கும் சரிவடைந்துள்ளது.


இருப்பினும், ரூபாய் மதிப்பின் அடிப்படையில், இதன் ஏற்றுமதி, சற்று வளர்ச்சி கண்டுள்ளது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், இந்தியா, 16,597 கோடி ரூபாய் மதிப்பிலான (350 கோடி டாலர்),8,62,021 டன் கடல் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்தது.இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், இதன் ஏற்றுமதியை, 450 கோடி டாலர் அளவிற்கு அதிகரிக்க, கடல் உணவுப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையம் இலக்கு நிர்ணயித்தது என்பது குறிப்பிடத்தக்கது.பண்ணைகளில் வளர்க்கப்படும், இறால் வகைகள் உற்பத்தி சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. இது தவிர, டீசல் விலை அதிகரிப்பால், கடலில் சென்று மீன் பிடிக்கும் நடவடிக்கைகள் வெகுவாக வீழ்ச்சி கண்டுள்ளன.


தென்கிழக்கு ஆசிய நாடுகள்:இதையடுத்து, உயர் வகை மீன்கள் ஏற்றுமதி மட்டுமின்றி, கானாங்கெளுத்தி, மத்தி போன்ற குறைந்த விலை கொண்ட மீன் வகைகள் ஏற்றுமதியும் சரிவடைந்துள்ளது.குறிப்பாக, தென்கிழக்கு ஆசிய நாடுகள், இவ்வகை மீன்களின் இறக்குமதியை, நடப்பாண்டில், வெகுவாகக் குறைத்து கொண்டு உள்ளன. இது தவிர, குளிர்பதன பெட்டகத்திற்கான வாடகை கட்டணம், 1,500 டாலராக அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவும், கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என, இத்துறையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.


பொருள் குவிப்பு வரி :இவை தவிர, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க நிலை மற்றும் இந்திய இறால்களுக்கு, அமெரிக்கா விதித்துள்ள பொருள் குவிப்பு தடுப்பு வரி போன்றவையும், கடல் பொருட்கள்ஏற்றுமதியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.இந்திய இறால்களில், "எதாக்சிகியூன்' என்ற நச்சுப் பொருள் அதிகமாக உள்ளது எனக் கூறி, ஜப்பான் அரசு, இதன் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.


நாட்டின் பண்ணை இறால்களின் உற்பத்தி, 2.50 லட்சம் டன்னை எட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 25 சதவீதம் அதிகமாகும். எனினும், சர்வதேச அளவில், இதன் விலை சரிவடைந்துள்ளதால், இதன் வாயிலாக ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கும் வருவாய் வீழ்ச்சி கண்டுள்ளது என, இந்திய கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி கூட்டமைப்பின் பொதுச் செயலர் இலியாஸ் சயித் தெரிவித்தார்.இந்நிலையில், வரும் 2015ம் ஆண்டிற்குள், கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியை இரண்டு மடங்காக உயர்த்த, மத்திய அரசு, இலக்கு நிர்ணயித்துள்ளது.


இலக்கு:இதன்படி, தற்போது, 350 கோடி டாலராக உள்ள கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியை, 700 கோடி டாலராக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட இலக்கு அளவை எட்டும் வகையில், பொது மற்றும் தனியார் துறை பங்களிப்புடன் கூடிய, பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களை மத்திய அரசு, செயல்படுத்த உள்ளதாக, வர்த்தக செயலர் எஸ்.ஆர்.ராவ் அண்மையில் தெரிவித்திருந்தார்.