தேடல்

தேசிய வங்கிகளில் லட்சம் காலிப்பணியிடம்: வங்கித் தேர்வு எழுத இளைஞர்கள் தயக்கம்

சேலம்: நாடு முழுவதும் உள்ள, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், ஒரு லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆண்டுதோறும், வங்கி தேர்வு மூலம் நியமனம் செய்யப்படும் இளைஞர்கள், ஓரிரு மாதங்களிலேயே, சாப்ட்வேர் மற்றும் மாற்று பணிகளுக்கு சென்று விடுவதால், வங்கிகளில் காலியிடம் அதிகரித்துள்ளது.

ஆரம்பத்தில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில், தற்போது, தனியார் வங்கிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தால், தனியார் வங்கிகளுக்கு லைசென்ஸ் வழங்கப்படும். ஐசிஐசிஐ வங்கிக்கு பின், கடந்த சில ஆண்டுகளாக, புதிய வங்கிகளுக்கான லைசென்ஸ் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.இந்தியாவில், எஸ்.பி.ஐ., இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல், மத்திய கூட்டுறவு வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய வங்கிகள் உள்ளன. நாடு முழுவதும், அந்த வங்கிகளை சார்ந்த கிளை அலுவலகங்கள், ஒரு லட்சத்துக்கும் மேல் உள்ளன. அவை தவிர, ஹெ.எச்.டி.ஃஎப்.சி., லட்சுமி விலாஸ், கரூர் வைஸ்யா, சிட்டி யூனியன், ஐசிஐசிஐ, கர்நாடகா வங்கி, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி என, பத்துக்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன.

தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில், 20 லட்சம் ஊழியர்கள் வரை பணியாற்றி வருகின்றனர்.தினசரி, பல லட்சம் கோடிக்கு பண பரிமாற்றம் நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில், ஐ.பி.பி.எஸ்.,(இந்தியன் பாங்க் பெர்ஷனல் செக்ஷன்) வங்கி தேர்வாணையம், குறைந்தபட்சம், 1,000 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடும். தேர்வில் வெற்றி பெற்றவர்கள், நாடு முழுவதும் உள்ள வங்கி கிளைகளில் நியமிக்கப்படுவர். சமீபகாலமாக, காலியிடங்களில் சேருவோர், ஓரிரு மாதங்களிலேயே, வங்கி பணியை துறந்துவிட்டு, ஐ.டி., கம்பெனிகளை நாடிச்செல்வதாக தெரியவந்துள்ளது. இதனால், காலியிடங்கள் அதிகரிப்புடன், தற்போதைய ஊழியர்களுக்கு, பணி நெருக்கடியும் கூடுதலாகி உள்ளது.சமீபத்திய நிலவரப்படி, ஒரு லட்சம் காலிப்பணியிடங்கள், தேசிய வங்கிகளின் கிளைகளில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியன் வங்கி மேலாளர் ஒருவர் கூறியதாவது:வங்கிப் பணிக்கு விரும்பி, இளைஞர்கள் யாரும் அதிகம் வருவதில்லை. முன்பெல்லாம், 10 மணிக்கு வந்தால், 5 மணிக்கு புறப்பட்டுச் சென்று விடலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது வேலைப்பளு அதிகரித்துள்ளது. புதிதாக பணியில் சேரும் இளைஞர்களும், ஓரிரு மாதங்களிலேயே, மாற்றுப்பணியை தேடிச் செல்கின்றனர்.பெரும்பாலும், ஐ.டி., கம்பெனிக்கு தான் செல்கின்றனர். இந்தியா முழுவதும், ஒரு லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. சம்பள உயர்வும், 400, 500 ரூபாய் என்ற அளவில் இருப்பதால், வங்கிப்பணியை அவர்கள் விரும்புவதில்லை. பணப்புழக்கம் சம்மந்தமான பணி என்பதாலும், தயங்குகின்றனர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை விட, தனியார் வங்கிகளில் சம்பளம் கூடுதலாக வழங்குவதால், அதை நாடிச் செல்பவர்களும் உண்டு.இவ்வாறு அவர் கூறினார்.