தேடல்

சூரசம்ஹார விழா வரும் 18ல் துவக்கம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி சுப்பிரமணியசுவாமி கோவிலில், வரும் 18ம் தேதி சூரசம்ஹார விழா நிகழ்ச்சி துவங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது.
முருகரால், சூரன் வதம் செய்யப்பட்டதை கோவில்களில் சூரசம்ஹார விழாவாக கொண்டாடப்படுகிறது. பொள்ளாச்சி சுப்பிரமணியசுவாமி கோவிலில்,வரும் 14ம் தேதி காலை 10.00 மணிக்கு உற்சவ காப்பு கட்டப்படுகிறது. இதனுடன் விழா துவங்குகிறது. மாலை 6.00 மணிக்கு பேரூர் ஆதினம் சாந்தலிங்க அடிகளின் கந்தபுராண சொற்பொழிவும் நடக்கிறது.
அதன்பின், வரும் 14ம் தேதி வரை தொடர்ந்து நான்கு கால அபிஷேக ஆராதனைகள் நடக்கவுள்ளது. வரும் 17ம் தேதி மாலை 6.00 மணிக்கு முருகர் வேல் வாங்கும் உற்சவமும், மறுநாள் (18ம் தேதி) மதியம் 3.00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கும். பேரூர் இளையபட்டம் ஆதீனம் மருதாசலஅடிகள் தலைமையில் விழா துவங்குகிறது.சுப்பிரமணியர் சத்திரம் மற்றும் தெப்பக்குளம் வீதி இணையும் இடத்தில், முதல் சூரன் தாரகனை வதம் செய்யப்படும். தெப்பக்குளம் வீதியும், வெங்கட்ரமணன் வீதியும் இணையுமிடத்தில் இரண்டாவது சூரனான சிங்கமுகன் தலையையும், ராஜாமில் ரோடு சந்திப்பில் மூன்றாவது சூரன் பானுகோபன் தலையையும், தேர்நிறுத்தம் சந்திப்பில் நான்காவது சூரன் சூரபத்மன் தலையும் வதம் செய்யப்படும்.வரும் 13ம் தேதி முதல் மதியம் 18ம் தேதி வரை பக்தர்கள் தண்டு விரதமிருந்து வழிப்படுவர். சூரன் வதை செய்யும் நிகழ்ச்சிக்குபின், கோவிலில் வாழைத்தண்டு, பழங்கள் உள்ளிட்டவற்றை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்வர். வரும் 19 காலை 9.00 மணிக்கு மகா அபிஷேகம், மாலை 6.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், வரும் 20ம் தேதி மாலை 6.00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கும். விழாவுக்கான ஏற்பாட்டை கோவில் பரம்பரை அறங்காவலர் அய்யாசாமியும், செயல்அலுவலர் ஜெயசெல்வம், ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.