தேடல்

சீரழிக்கும் மதுவால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: வைகோ கவலை

கள்ளிக்குடி:டில்லி மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிப்பு, துத்துக்குடியில் 13 வயது பள்ளி மாணவி பலாத்காரம் என.. காட்டுமிராண்டித்தனங்களுக்கு, மதுவே காரணம். தனியாக இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, என, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ கூறினார். மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, நெல்லை உவரியில் கடந்த 12ந்தேதி நடைப்பயண பிரசாரம் துவக்கிய வைகோ, நேற்று, மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வந்தார்.அவர் கூறியதாவது: மதுவின் கொடுமையை அகற்றுவதே இப்பயணத்தின் நோக்கம். எட்டு ஆண்டுகளுக்கு முன், நடைப்பயணம் செய்யும் போது, மதுவின் தீமையை அறிந்தேன். மாணவர்கள் மதுவிற்கு அடிமையாவது விளைநிலங்களை தீயிட்டு கொளுத்துவதற்குச் சமம்.

நகர்புறங்களில் கைநிறைய சம்பாதிக்கும் பெண்கள், கேளிக்கை விடுதிகளில், மது அருந்த தொடங்கி விட்டனர். இது சமுதாயச் சாபக்கேடு. டில்லி மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிப்பு, துத்துக்குடியில் 13வயது பள்ளி மாணவி பலாத்காரம் செய்யும் காட்டுமிராண்டித்தனங்களுக்கு, மதுவே மூல காரணம். நான் செல்லும் வழிகளில், பெண்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். மதுவிற்கு எதிராக மவுனப்புரட்சியை தொடங்கி விட்டனர். பூரண மதுவிலக்கே எங்கள் இலக்கு, என்றார்.முன்னதாக விருதுநகரில் அவர் பேசியதாவது: என்னை தேர்தலில் தோற்கடித்தது நல்லது. நாட்டிற்கு நல்லது செய்யவும், மக்கள் பணி செய்யவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நச்சு வாயு நிறுவனத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு, பூரண மது விலக்கு பிரசாரம் என தொடர்கிறேன். மது போதையால் ரோமபுரி சாம்ராஜ்யம் அழிந்தது. உறுதியுடன் வெற்றி கிடைக்கும் வரை போராடுவேன், என அவர் பேசினார்.