தேடல்

சுரேஷ் கல்மாடி மீது இன்று குற்றச்சாட்டு பதிவு:காமன்வெல்த் விளையாட்டு ஊழல்

புதுடில்லி

: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், முறைகேடு செய்ததாக குற்றம்

சாட்டப்பட்ட, சுரேஷ் கல்மாடி உட்பட, 11 பேர் மீது, சி.பி.ஐ., சிறப்பு

கோர்ட்டில், இன்று குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படுகின்றன. டில்லியில்,

2010ல், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்தன. காங்கிரஸ் கட்சியை

சேர்ந்த, மகாராஷ்டிரா மாநிலம், புனே தொகுதி எம்.பி., மற்றும் இந்திய

ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்த, சுரேஷ் கல்மாடி, இப்போட்டியின்,

ஒருங்கிணைப்பு குழு தலைவராக, நியமிக்கப்பட்டார்.இதில், 10 பேர்,

உறுப்பினர்களாக இருந்தனர். அரங்கம் அமைத்தது, விளையாட்டுச் சாதனங்கள்

வாங்கியது உட்பட,காமன்வெல்த் போட்டிக்கான, பல ஏற்பாடுகளில், முறைகேடுகள்

நடந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு

உத்தரவிடப்பட்டது.90 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக, விசாரணையில்

தெரிய வந்தது. இதையடுத்து, சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டு, தற்போது

ஜாமினில் உள்ளார்.கல்மாடி உட்பட, 11 பேர் மீது, சி.பி.ஐ., சிறப்பு

கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான, விசாரணை அறிக்கையை,

டிச., 21ம் தேதி, சி.பி.ஐ., தாக்கல் செய்தது. பின், நீதிபதி பிறப்பித்த

உத்தரவில், கல்மாடி உட்பட, 11 பேர் மீது, ஏமாற்றுதல், மோசடி, குற்றச்

செயல்களில் ஈடுபடுதல், கிரிமினல் சதி ஆகிய பிரிவுகளின் கீழ்,

குற்றச்சாட்டுகளை,ஜன., 10ம் தேதிக்குள், பதிவு செய்ய வேண்டும் என,

தெரிவித்தார்.சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டின், புதிய நீதிபதியாக பதவியேற்ற

ரவீந்தர் கவுர், வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் முழுவதையும், படித்து பார்க்க

வேண்டியுள்ளதால், பிப்., 4ம் தேதி, கல்மாடி மற்றும், 10 பேர் மீது

குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, கல்மாடி, இந்திய

ஒலிம்பிக் சங்க செயலர் லலித் பனோட்உட்பட, 11 மீது, இன்று

குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படுகின்றன.