தேடல்

சிறந்த நிர்வாகத்திற்காக நாடு காத்திருக்கிறது: டில்லி கல்லூரியில் மோடி பேச்சு

புதுடில்லி: சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டுகள் ஆகியும், சிறந்த நிர்வாகத்திற்காக நாடு காத்திருப்பதாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட நரேந்திர மோடி, முதல் முறையாக இன்று டில்லி வந்தார். டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். ஒரு மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்பவர்கள் பிரதமரை சந்திப்பது வழக்கமான நடைமுறை. இதன்படி, மன்மோகன் சிங்கை சந்தித்து விட்டு வெளியே வந்த அவர், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், குஜராத் மாநில திட்டங்களுக்கு உதவி செய்யும் படி தான் பிரதமரை கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, டில்லியிலுள்ள நாட்டின் மிகச்சிறந்த கல்லூரிகளில் ஒன்றான ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உரையாற்றினார். குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற பின், அவர் பங்குபெறும் முதல் பொது நிகழ்ச்சி இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

உலக சூழலில் வளர்ந்து வரும் பொருளாதார மாடல்கள் என்ற தலைப்பில்அவர் பேசுகையில்,

* நான் மகாத்மா காந்தி, வல்லபாய் படேல் ஆகியோர் பிறந்த மாநிலத்திலிருந்து வந்துள்ளேன்.
* நாட்டு விடுதலைக்காக பல தலைவர்கள் தங்களது வாழ்க்கையை சிறையிலேயே கழித்துள்ளனர்
* நமது விடுதலைப்போராட்டம் அகிம்சை மற்றும் ஆயுதம் ஏந்திய போராட்டம் என இரு பிரிவுகளாக நடந்தது.
* பல தலைவர்கள் தங்களது இன்னுயிரை நாட்டின் சுதந்திரத்திற்காக கொடுத்தனர்.
* ஆனால் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளாகியும் நாம் இன்னும் சுயாட்சி அடையாதவர்களாகவே உள்ளோம்.
* இங்கு நான் சுயாட்சி என குறிப்பிட்டது சிறந்த நிர்வாகத்தை. பி2ஜி2. அதாவது மக்கள் ஆதரவு, அரசு ஆதரவு
*இந்தியாவில் உள்ள அரசுகள் தீயணைப்பு வீரர்களைப் போல் உள்ளனர்.
*இப்போது எதிலும் நம்பிக்கையின்மை தன்மையே காணப்படுகிறது.
* குஜராத் முதல்வராக 4வது முறையாக பொறுப்பேற்றுள்ளேன். எனது அனுபவத்திலிருந்து தற்போதைய நடைமுறையிலேயே நிறைய சாதிக்க முடியும்.
* நான் ஒரு நேர்மறையான நபர். என்னால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
* நாம் மிகப்பெரிய இளைஞர் சமுதாயத்தை கொண்டுள்ளோம். நமக்கு முன்பாக உள்ள சவால், எவ்வாறு நமது வாய்ப்பை பயன்படுத்துவது என்பதே.
* நமது நாடு ஏழை நாடு அல்ல. நாம் மிகப்பெரிய இயற்கை வளத்தை கொண்டுள்ளோம். ஆனால் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது நமக்குத் தெரியவில்லை. அதை முழுமையாக பயன்படுத்துவதே நமக்கு முன்பாக உள்ள சவால்.
* குஜராத் மாநிலத்தை மூன்று தூண்கள் மூலமாக முன்னேற்றியுள்ளோம். விவசாயம், தொழில் மற்றும் சேவைத்துறை. இதில் ஒரு தூண் சரிந்தாலும், மாநிலத்தின் மொத்த பொருளாதாரமும் சரிந்து விடும்.
* குஜராத் பல ஆண்டுகளாக நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு வந்தது. தற்போது அங்கு நீர் தேவைக்கும் அதிகமாக உள்ளது.
* குஜராத் வைப்ரண்ட், தொழில் முதலீட்டு ஈர்ப்பு நிகழ்ச்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. ஆனால் நான் விவசாயிகளை ஒவ்வொரு ஆண்டும் சந்திக்கிறேன்.
* விவசாயிகளுக்கு எவ்வாறு விளைச்சலைப் பெருக்குவது என்பது குறித்து கற்றுக்கொடுக்கிறோம்.
* நான் முதல்முறையாக முதல்வராக பொறுப்பேற்ற போது, குஜராத்தில் 23 லட்சம் பேல் பருத்தி உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது 1 கோடி பேல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
* டில்லியில் உள்ள மக்கள் குஜராத்திலிருந்து வரும் பாலை அருந்துகிறார்கள். ஐரோப்பாவில் நீங்கள் பின்டி சாப்பிட்டால் அது குஜராத்திலிருந்து தயாரிக்கப்பட்டதாக இருக்கும்.
*உலகளவில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆனால் உலகிலேயே முதல்முறையாக தடவியல் அறிவியல்பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது குஜராத்தில் தான்.
*குஜராத் இளம் போலீஸ் காரர்களை கொண்டுள்ளது. அங்குள்ள ஒரு கான்ஸ்டபிள் கூட தொழில்நுட்பம் தெரிந்தவர் தான்.
*இந்தியா எவ்வளவோ ஏற்றுமதி செய்கிறது. ஏன் ஆசிரியர்களை ஏற்றுமதி செய்ய முடியாது?
* நமது இளைஞர்கள் இளம் சக்தி. அவர்களை வெறும் இளம் வாக்காளர்களாக மட்டும் பார்க்க வேண்டாம்.
* உலகளவில் இந்தியாவின் இமேஜை நமது இளைஞர்கள் மாற்றிக்காட்டுவார்கள். இவ்வாறு மோடி பேசினார்.