தேடல்

சேலத்தில் தி.மு.க., கூட்டத்தில் மோதலால் பரபரப்பு

ஆத்தூர்: ஆத்தூரில் தி.மு.க., உறுப்பினர்கள் அட்டை வழங்கும் விழாவில் தி.மு.க.,வினர் மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க., உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் தி.மு.க., அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா, தி.மு.க., தலைமைக்கழக பொதுக்குழு உறுப்பினர் மணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தி.மு.க.,வினருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. அப்போது அங்கிருந்த ஆத்தூர் 9வது வார்டு கவுன்சிலர் ஸ்டாலின், உள்ளாட்சி தேர்தலில் சீட் கிடைக்காமல் தி.மு.க., வேட்பாளர்களுக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிட்டவர்களுக்கும், நகராட்சி துணை சேர்மன் தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக செயல்பட்ட தி.மு.க.,வை சேர்ந்த கவுன்சிலர் ஆயிஷா மற்றும் அவரது கணவர் கமால்பாட்ஷாவிற்கும் அடையாள அட்டை வழங்கக்கூடாது என கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அவர்களை வீரபாண்டி ராஜா சமாதானம் செய்து ஸ்டாலினை அனுப்பி வைத்தார். ராஜா சென்றதும், மீண்டும் ஸ்டாலினுக்கும், கமால் பாட்ஷாவிற்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் ஸ்டாலின் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர் என்றும், கமால் பாட்ஷா பனமரத்துப்பட்டி ராஜேந்திரனின் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது.