தேடல்

சிவகாசி பட்டாசு ஆலையில் விபத்து: 3 பேர் பலி; பலரின் நிலை கவலைக்கிடம்

சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 3 பேர் உடல் கருகி பலியாகினர். 8 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அடுத்த நாரணாபுரத்தில் ரத்னா பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இங்கு பேன்சி ரக வெடிகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். தொழிற்சாலை வளாகத்தில் மரத்தடியில் இவர்கள் ஈடுபட்டு வேலை செய்து கொண்டிருந்த போது, வெடி உராய்வு ஏற்பட்டதில் வெடிவிபத்து ஏற்பட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே, செல்லையா (35), கனி (40), மாரிமுத்து (48) ஆகிய 3 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் காயமடைந்தனர். பலத்த தீக்காயம் அடைந்த இவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகி்ச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இன்று ஞாயிறு என்பதால், சோதனைக்கு அதிகாரிகள் வர வாய்ப்பில்லை என தெரிந்து கொண்டு ஆலையில் அளவுக்கு அதிகமானோர் பணியி்ல் ஈடுபடுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இன்று நடந்த வெடிவிபத்தில் காயமடைந்த 8 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 4 பேரின் உடலில் 90 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணி்க்க‌ை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட கலெக்டர், அரசு உயரதிகாரிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

இதே போன்று கடந்த 25-ம் தேதியன்று விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் குண்டலபட்டி அருகே கரு மருந்து உராய்வு ஏற்பட்டதில் கருப்பசாமி, முத்துராமலிங்கம் என இருவர் பலியாயினர். இந்த சம்பவம் நடந்த நான்கு நாட்களில் மீண்டும் ஒரு வெடிவிபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.