தேடல்

ஜனவரி 20-ல் மதுரையில் அன்னக்கொடி ஆடியோ ரிலீஸ்

பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவாகி வரும் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் ஆடியோ ரிலீஸ் மதுரையில் வருகிற ஜனவரி 20ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. கிராமிய மண் மனம் மாறாமல் திரைக்கதையை கொடுத்து சினிமாவில் வெற்றிக்கொடியை நாட்டியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி வரும் புதியபடம் அன்னக்கொடியும் கொடிவீரனும். இப்படத்தில் புதுமுகம் ஹீரோவாகவும், ராதாவின் மகள் கார்த்திகா ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர். ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் இப்படத்தின் ஷூட்டிங்கை பிரம்மாண்டமாக துவக்கிய பாரதிராஜா, தற்போது படத்தின் ஷூட்டிங்கை முடித்து ரிலீஸ்க்கான வேலைகளில் இறங்கி இருக்கிறார். அதில் ஒருகட்டமாக படத்தின் பாடல் வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறார்.

தேனியில் ஷூட்டிங்கை ஆரம்பித்த பாரதிராஜா, இசைவெளியீட்டை மதுரையில் நடத்த இருக்கிறார். மதுரை ரயில்வே மைதானத்தில் இந்த இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்துகிறார். படத்தின் ஆடியோ சி.டி.யை இசைஞானி இளையராஜா வெளியிட, அதனை டைரக்டர் மணிரத்னம் பெற்றுக்கொள்கிறார். இவர்கள் தவிர தமிழ் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் பலர் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.

முன்னதாக இந்த ஆடியோ வெளியீட்டிற்கு ரஜினி,கமல், ஸ்ரீதேவி ஆகியோரை அழைக்க பாரதிராஜா திட்டமிட்டு இருந்தார். ஆனால் இவர்கள் யாரும் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. கமல் விஸ்வரூபம் ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருப்பதால் இதில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது. அதேபோல் ரஜினி கோச்சடையான் வேலைகளில் இருப்பதால் அவரும் பங்கேற்கமாட்டார் என்று கூறப்படுகிறது.