தேடல்

ஜின்னாவை மத சார்பற்றவர் என குறிப்பிட்டது ஏன்? அத்வானி விளக்கம்

திருவனந்தபுரம்:ராமகிருஷ்ண மடத்தின் முன்னாள் தலைவர், ரங்கநாதானந்தர் கூறியதன் படியே, முகமது அலி ஜின்னாவை, மதச்சார்பற்ற தலைவர் என கூறினேன், என, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், நேற்று முன்தினம் அத்வானி கூறியதாவது:சிறு வயதில் நான், பாகிஸ்தானின், கராச்சி நகரில் வசித்த போது, அங்குள்ள, ராமகிருஷ்ண மடத்திற்கு செல்வது வழக்கம். அங்கு, சுவாமி ரங்கநாதானந்தரின் சொற்பொழிவுகளை கேட்பது உண்டு.
நாடு பிரிவினை அடைந்து இந்தியா வந்த பின், கோல்கட்டாவில், சுவாமியை சில முறை சந்தித்துள்ளேன். ஒரு முறை சந்திக்கும் போது, பாகிஸ்தான் அரசியல் அமைப்பு சட்ட சபையில், முகமது அலி ஜின்னா பேசியதை, சுவாமி என்னிடம் கூறினார்.

பாகிஸ்தான் மக்கள், மத வேறுபாடுகளை தவிர்க்க வேண்டும் என, ஜின்னா பேசியுள்ளதை, சுவாமி மூலம் தான் அறிந்தேன். அதன் படி தான், ஏழு ஆண்டுகளுக்கு முன், பாகிஸ்தான் சென்றிருந்த போது, ஜின்னாவை மதச் சார்பற்ற தலைவர் என, கூறினேன்.இவ்வாறு, அத்வானி பேசினார்.

நாடு பிரிவினைக்கு முக்கிய காரணமாக விளங்கிய, முகமது அலி ஜின்னாவை, மதச்சார்பற்றவர் என, அத்வானி கூறியதால், சங் பரிவார் அமைப்புகளின் கடும் கண்டனத்திற்கு ஆளானார். அதனால், பா.ஜ., தலைவர் பொறுப்பில் இருந்தும், அவர் ராஜினாமா செய்ய நேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வர்க்கலா நகரில் நேற்று நடந்த, சிவகிரி மடத்தின் நிகழ்ச்சியில், அத்வானி பேசுகையில், ராமகிருஷ்ணர், விவேகானந்தர், நாராயண குரு போன்ற துறவிகள், மத பெரியவர்களின் சொற்பொழிவுகள், கொள்கைகளை பாட திட்டங்களில் சேர்க்க வேண்டும். இதன் மூலம், மாணவர்களை நன்னெறி படுத்த முடியும், என்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற, மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான, வயலார் ரவி, அத்வானியின் யோசனையை, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெரிவித்து, தேசிய அளவில் பாட திட்டங்களில் மதகுருமார்கள் அறிவுரைகளை சேர்க்க ஏற்பாடு செய்வேன், என்றார்.